3 1 2023
சென்னையில் தி.மு.க நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸுக்கு தி.மு.க நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட நபர்கள் 2 பேர் மன்னிப்பு கேட்டதையடுத்து, அந்த பெண் போலீஸ் புகாரை வாபஸ் பெற்றார்.
சென்னையில் உள்ள சாலிகிராமத்தில் தசரதபுரம் பேருந்து நிலையம் அருகே முன்னாள் அமைச்சரும் தி.மு.க-வின் முன்னாள் பொதுச் செயலாளருமான பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் மா. சுப்பிரமணியன், தி.மு.க எம்.பி.க்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினார்கள்.
அப்போது, இந்த கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் ஒருவருக்கு தி.மு.க இளைஞரணி நிர்வாகிகள் 2 பேர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. அந்த பேரையும் சுற்றி வளைத்த போலீசார், அவர்களைக் கைது செய்ய முயன்றபோது தி.மு.க-வினர் நடவடிக்கை எடுக்க விடாமல் காவல்துறையினரை தடுத்து நிறுத்தினர். அதனால், போலீசாரால் அவர்களைக் கைது செய்ய முடியவில்லை.
இந்த சம்பவத்திற்கு, எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, நடிகை குஷ்பு ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். மேலும், அவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்நிலையில், தி.மு.க நிகழ்ச்சியில் பெண் போலீஸுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட தி.மு.க-வைச் செர்ந்த 2 பேரும் அந்த பெண் போலீஸிடம் மன்னிப்புக் கேட்டதையடுத்து அவர் தனது புகாரை வாபஸ் பெற்றார்.
பாலியல் தொல்லைக்கு ஆளாண பெண் போலீஸ் கான்ஸ்டபிள் அளித்த புகாரின் அடிப்படையில், இன்று அவர் விசாரணைக்கு அழைக்கப்படவிருந்தார். ஆனால், குற்றம்சாட்டப்பட்ட நபர்கள், பெண் போலீஸிடம் மன்னிப்பு கேட்டதையடுத்து அவர் தனது புகாரை வாபஸ் பெற்றார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/woman-constable-molested-by-dmk-cadres-withdraw-her-complaint-after-suspects-apologized-to-her-570156/