2 1 2023
How to control Cholesterol | கொலஸ்ட்ராலை எப்படி கட்டுப்படுத்துவது | நம் உடல் ஒருநிலையில் இயங்க கொழுப்பு நமக்கு மிகவும் தேவை. நம் உடல் செல்கள் உற்பத்தியாவதற்கும், சில ஹார்மோன்கள் சுரப்பதற்கும் கொலஸ்ட்ரால் அவசியம்.
உடலில் கொலஸ்ட்ரால் அளவோடு இருந்தால் ஆபத்தில்லை. அளவுக்கு அதிகமாகும் போதுதான் மாரடைப்பு, பக்கவாதம், உடல் பருமன், ரத்தக் குழாய் அடைப்பு போன்ற பல உடல்நல பிரச்சனைகள் வருகின்றன.
எனவேதான், கொலஸ்ட்ராலை அளவோடு வைத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
நாம் என்ன சாப்பிடுகிறோமோ, அது நேரடியாக நம் உடலில் கொழுப்பு சேருவதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
நார்ச் சத்துள்ள உணவு, கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். முட்டைக்கோஸ், சுரைக்காய், முள்ளங்கி, பீன்ஸ் போன்ற நார்ச் சத்து நிறைந்த காய்கறிகளை, சிவப்பு அரிசி, முழு தானியங்களை தினசரி எடுத்துக்கொள்ள வேண்டும். இது கொலஸ்ட்ராலின் அதிகரிப்பை ஐந்து சதவிகிதம் வரைக்கும் குறைக்கும்.
முடிந்தவரை துரித உணவு, இறைச்சி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக மீன் சாப்பிடலாம். மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிக அளவில் இருப்பதால், இது கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
நொறுக்குத் தீனிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளில் கெட்ட கொழுப்பு, மிக அதிக அளவில் இருக்கிறது. இதுதவிர, அதிக அளவில் சிகரெட் புகைப்பது, மது அருந்துவது நம் உடலில் உள்ள எச்.டி.எல் எனப்படும் நல்ல கொழுப்பு அளவைக் குறைத்துவிடும். இதனால் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
கொழுப்பை கட்டுக்குள் வைப்பது எப்படி?
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை முதலில் பரிசோதிக்க வேண்டும். உயரத்துக்கு ஏற்ற எடையில் இருக்கிறோமா என்பதைப் பார்க்க வேண்டும். பி.எம்.ஐ. அதிகமாக இருந்தால் உடல் எடையைக் குறைப்பதற்கான முயற்சிகளை உடனடியாக எடுக்க வேண்டும். இது உடலில் கொழுப்பு அளவைக் குறைப்பதில் உதவியாக இருக்கும்.
ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகமாக உள்ளவர்களுக்கு ‘ஸ்டேடின்’ என்ற மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது. இது கொழுப்பைக் குறைக்க உதவும். மருத்துவரின் பரிந்துரையின்பேரில் இதை எடுத்துக்கொள்ளலாம்.
தினசரி குறைந்தது 30 நிமிடங்களுக்காவது உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதிகப்படியான உடல் எடையைக் குறைப்பது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி என வாழ்க்கை முறையில் நாம் செய்யும் சிறிய மாற்றங்கள், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும்.
source https://tamil.indianexpress.com/lifestyle/health-how-to-control-cholesterol-569317/