4 2 23
கனமழை காரணமாக புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் கடந்த இரண்டு நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
அதன்படி தஞ்சையில் கடந்த வியாழக்கிழமை முதலே தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை தயாராக இருந்த சம்பா பருவ நெற்பயிர்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன.
இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்; கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி உள்ளிட்ட 15 மாவட்டங்களிலும் காரைக்காலில் ஒரு சில பகுதிகளிலும் அடுத்த ஒன்று முதல் மூன்று மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
இதனிடையே, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகை, வைதீஸ்வரன்கோயில் போன்ற இடங்களில் நேற்று முதல் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இதனால், தஞ்சாவூரிலும், புதுக்கோட்டை மாவட்டத்திலும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் நாளை (பிப்.5) முதல் வரும் பிப்.7ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-today-weather-updates-thanjavur-pudukottai-heavy-rain-587959/