தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு விடுமுறை குறித்து பள்ளிக் கல்வித் துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வரும் 30ஆம் தேதி முதல் அக்டோபர் 9-ம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபபோல, 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 5-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 10இல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும், 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே எண்ணும் எழுத்தும் திட்ட வளரறி மதிப்பீட்டுத் தேர்வுக்காக 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக காலாண்டு தேர்வு நாட்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென்று தமிழக பள்ளிகளில் நிகழாண்டு பொது காலாண்டு தேர்வுகள் கிடையாது என்று நேற்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது. மேலும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் வெவ்வேறு தேதிகளில் காலாண்டு தேர்வுகளை நடத்த நடவடிக்கை எடுக்குமாறும் திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் காலாண்டு தேர்வை நடத்தி முடிக்கவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளி அளவில் வினாத்தாள்களை தயாரித்து காலாண்டு தேர்வை நடத்திக் கொள்ளலாம் என்றும், தேர்வு தேதிகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா
source https://news7tamil.live/when-is-the-quarterly-exam-holiday-school-education-department-information.html