சிவகளை அகழாய்வுப் பணியில் கண்டுபிடிக்கப்பட்ட உலோகப் பொருட்களை கருவி மூலம் ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள சிவகளையில் மிகப்பெரிய பரம்பு பரந்து
விரிந்து காணப்பட்டது. இந்த பரம்பு பகுதியில் ஏராளமான தொல்லியல் பொருட்கள்
கிடந்தது. இதை கள ஆய்வில் ஆசிரியர் மாணிக்கம் என்பவர் கண்டறிந்தார்.
இதற்கிடையே இந்த பகுதியில் முறையாக அகழாய்வு பணிகள் செய்ய வேண்டும் என்ற
கோரிக்கை எழுந்தது. இதற்கிடையில் கடந்த 2020ம் ஆண்டு முதல் முறையாக இந்த சிவகளை பரம்பு பகுதியில் அகழாய்வுப் பணிகள் தொடங்கியது.
தொடர்ந்து மூன்றாம் முறையாக இந்த ஆண்டு சிவகளை பரம்பு பகுதியில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இதில் அகழாய்வு இயக்குனர் பிரபாகரன் தலைமையில் இந்த அகழாய்வு பணிகள் நடந்தது. இந்த ஆண்டு நடந்து வரும் அகழாய்வுப் பணியில் 30-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரும்புப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் அகழாய்வுப் பணியில் கிடைத்த உலோகப் பொருட்களை ஆய்வு செய்வதற்காக பெங்களூரு தேசிய முன்னோக்கு ஆய்வு நிறுவன தொன்மை அறிவியல் கலைத்திட்ட பேராசிரியரும் பத்மஸ்ரீ விருது பெற்ற தொல்லியல் ஆய்வாளர் சாரதா ஸ்ரீனிவாசன் தலைமையில் ஆய்வுக் குழுவினர் உலோகப் பொருட்களை ஆய்வு செய்ய வருகை தந்தனர்.
அவருடன் இணைய ஆய்வாளர்கள் சுரேஷ், மதன், சௌந்தரராஜன், ஒளிப்பட ஆவணர் பாலாஜி, தொழில்நுட்ப உதவியாளர் தீபக் ராம் ஆகியோர் வருகை தந்தனர்.
இந்த ஆய்வு மேற்கொள்வதற்காக எக்ஸ்ஆர்எப் எனப்படும் உலோக பொருட்களை பிரித்து
பார்க்கும் கதிரியக்க கருவி மூலம் உலோகப் பொருட்களை ஆய்வு செய்தனர்.
மூன்று முறை ஆய்விலும் கிடைத்த இரும்பு பொருட்கள், வெண்கலப் பொருட்கள் மற்றும்
தங்கப் பொருளையும் அவர்கள் ஆய்வு செய்தனர். அவர்களுக்கு அகழாய்வு இயக்குனர்
பிரபாகரன், விக்டர் ஞானராஜ் ஆகியோர் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் குறித்து
விளக்கமளித்தனர்.
source https://news7tamil.live/instrumental-study-of-objects-found-during-the-excavation-of-shivakalai.html