புதன், 8 பிப்ரவரி, 2023

துருக்கியில் 3 மாதங்கள் அவசர நிலை பிரகடனம் – அதிபர் தையிப் எர்டோகன் அறிவிப்பு

 7 2 23

துருக்கியில் 3 மாதங்களுக்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் தையிப் எர்டோகன் அறிவித்துள்ளார்.

அடுத்தடுத்த நிலநடுக்கங்கள், சீட்டு கட்டுபோல் சரிந்த கட்டடங்கள், 5 ஆயிரத்திற்கும் அதிகமான உயிரிழப்புகள் என, ஒட்டுமொத்த துருக்கி தேசமே உருக்குலைந்துள்ளது. துருக்கி – சிரியா எல்லையில் உள்ள காசியண்டெப் நகர் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து 5 முறை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டது. இரண்டாவது நாளாக இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

\

துருக்கியில் 1939ஆம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய பேரழிவாக இது கருதப்படுகிறது. துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது. இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. துருக்கி மற்றும் சிரியாவுக்கு, உணவுகள், மருத்துவப்பொருட்கள், எரிபொருட்கள், மீட்பு படை விமானங்கள் உள்ளிட்டவற்றை பல்வேறு நாடுகள் அடுத்தடுத்து அனுப்பி வருகின்றன.

இந்நிலையில், துருக்கியில் 3 மாதங்களுக்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு லட்சம் படுக்கைகளுடன் 54 ஆயிரம் தற்காலிக மருத்துவக் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அதிபர் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். மீட்பு பணிகளில் 54 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ள அவர், இதுவரை 70 நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் பேர் உயிருடன் மீட்கப்பட்டு, அரசுக்கு சொந்தமான பாதுகாப்பு மையங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய துருக்கி துணை அதிபர் ஃபுயாத் ஆக்டே, 14 நாடுகளில் இருந்து 3 ஆயிரத்து 294 மீட்பு குழுக்கள் துருக்கிக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். முன்னதாக 7 நாட்களுக்கு தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அந்நாட்டின் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


source https://news7tamil.live/3-month-state-of-emergency-declared-in-turkey-president-tayyip-erdogan-announced.html