செவ்வாய், 7 பிப்ரவரி, 2023

பதில் சொல்லியே ஆகணும்.. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

 6 2 23

இது என்ன அதானி சர்க்காரா? மோடி பதில் சொல்லியே ஆகணும்.. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

உலக பணக்காரர் கௌதம் அதானி, பங்குச் சந்தைகளில் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை சமர்பித்தது.
இதையடுத்து, அதானியின் சொத்துக்கள் ஆட்டம் கண்டுவருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.

மக்களவையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சிகள் அதானி, மோடி நட்பு, எல்ஐசி, எஸ்பிஐயை காப்பாற்றுங்கள், அதானி சர்க்கார், மோடி பதில் சொல்லணும் உள்ளிட்ட பதாகைகளை கைகளில் வைத்திருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், திமுக, தேசிய வாத காங்கிரஸ், பாரத் ராஷ்ட்டிர சமிதி (கே சந்திர சேகர் ராவ்), ஒருங்கிணைந்த ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, ராஷ்ட்ரீய லோக் தளம், புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி, ஆம் ஆத்மி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ராஷ்ட்ரீய ஜனதா தளம், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 16க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் கலந்து கொண்ட நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்துக்கு நாங்கள் தயாராக உள்ளோம்.
ஆனால் அதற்கு முன் கௌதம் அதானி விவகாரம் குறித்து நரேந்திர மோடி பேச வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பதில் மிக முக்கியமானது” என்றார்.

எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டம் குறித்து பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, “இது நாட்டின் நலனுக்கானது இல்லை. மக்கள் தங்களின் பிரச்னைகளை பேசுவதற்காக இவர்களை தேர்ந்தெடுத்துள்ளார்கள்” என்றார்.

இதற்கிடையில் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தங்கர், “வெளிநாட்டு நோக்கங்களை விவாதிப்பதற்கான ஒரு பொருத்தமான மன்றம் இது இல்லை. சாமானியர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். இது அதற்கான நேரம். நான் உங்களிடம் இதனை கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இந்த நிலையில் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.


source https://tamil.indianexpress.com/india/adani-modi-mei-yaari-hai-save-lic-at-oppn-protest-outside-parliament-slogans-take-centre-stage-589342/