சனி, 24 நவம்பர், 2018

பெங்களூரூ வழியாக சென்னை - மைசூரு இடையே புல்லட் ரயில் சேவை? November 24, 2018

சென்னை - மைசூரு நகரங்களுக்கு இடையிலான புல்லட் ரயில் சேவை திட்டம் குறித்த சாத்தியக்கூறு அறிக்கை ஜெர்மன் அரசு சார்பில் இந்திய ரயில்வேயிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரக்கோனம், பெங்களூரு வழியாக சென்னை முதல் மைசூரு வரையிலான 435 கிமீ நீள தூரத்திற்கான புல்லட் ரயில் சேவை வழங்கும் வகையிலான திட்டத்திற்கான சாத்தியக் கூறு அறிக்கையை இந்திய ரயில்வேயின் தலைவர் அஷ்வானி லோஹானியிடம் ஜெர்மன் நாட்டிற்கான தூதர் மார்டின் நே நேரில் அளித்துள்ளார். இந்த சாத்தியக்கூறு சோதனை ஜெர்மன் அரசின் சார்பில் நடத்தப்பட்டது.

இதன் மூலம் 7 மணிநேரமாக உள்ள சென்னை - மைசூரு பயண தூரம் பாதியாக குறைக்கப்படும். மணிக்கு 320 கிமீ வேகத்தில் இந்த பாதையில் புல்லட் ரயில்கள் இயக்கப்படும் எனவும், சென்னையிலிருந்து மைசூருக்கு வெறும் 2 மணி நேரம், 25 நிமிடங்களில் சென்று விடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில்பாதையில் 85% உயர்த்தப்பட்ட வழியாகவும், 11% சுரங்கப்பாதையின் வழியாகவும் இருக்கும் என இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய ரயில்வேயின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த அறிக்கையானது ஏற்கப்படும்பட்சத்தில் வரும் 2030ஆம் ஆண்டு முதல் சென்னை - மைசூரு இடையே புல்லட் ரயில்சேவை தொடங்கப்படும் என தெரிகிறது.

தற்போது அமைந்திருக்கும் வழித்தடத்திலேயே இத்திட்டத்தினை செயல்படுத்தலாம் என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதற்கான நடைமுறை சாத்தியக்கூறுகள் அரிதாகவுள்ளதாக கூறி அதனை இந்திய ரயில்வே நிர்வாகம் ஏற்க மறுத்துவிட்டது.

ஒரு லட்சம் கோடி மதிப்பீட்டிலான இத்திட்டம் சென்னை, பெங்களூரு, மைசூரு இடையே பயணம் செய்யும் பயணிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பாதையில் தற்போது நடைமுறையில் உள்ள விமானக் கட்டணத்திற்கு நிகராகவே இந்த வழித்தடத்தில் கட்டணம் நிர்ணயிக்கப்படும் எனவும் அஷ்வானி லோஹானி தெரிவித்தார்.