வெள்ளி, 23 நவம்பர், 2018

குழந்தைகள் கடத்தலை தடுப்பது குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! November 23, 2018

Image

காப்பகங்களில் சேர்க்கப்படும் குழந்தைகளின் மரபணு மாதிரிகளை சேகரித்து வைக்க அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நடைபெற்று வரும் குழந்தைகள் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கு, விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் மொத்தம் 1,274 குழந்தை காப்பகங்கள் இருப்பதாகவும், அதில் 3 காப்பகங்கள் பதிவு செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

அத்தகைய பதிவு செய்யப்படாத குழந்தைகள் காப்பகங்களில் அரசு ஏன் திடீர் ஆய்வு மேற்கொள்ள கூடாது என நீதிபதிகள் அப்போது கேள்வி எழுப்பினர். மேலும், நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்காமல், இந்த விவகாரத்தில் துடிப்புடன் செயல்பட வேண்டும்  என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

அதோடு, குழந்தைகள் கடத்தல் பின்னணியில் ரவுடி கும்பல் ஏதாவது உள்ளதா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், குழந்தை கடத்தலை தடுக்க, காப்பகத்தில் சேர்க்கப்படும் குழந்தைகளின் மரபணு மாதிரிகளை சேகரித்து வைக்க அரசுக்கு உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை டிசம்பர் 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.