வெள்ளி, 23 நவம்பர், 2018

அந்தமான் சாண்டினல் தீவிற்கு சென்ற அமெரிக்க இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம்: திடுக்கிடும் தகவல்கள்! November 23, 2018

அந்தமானில் உள்ள சாண்டினல் தீவுக்கு சென்ற அமெரிக்க இளைஞர் மீது அம்பு எய்தி கொலை செய்த பழங்குடியினர் பற்றிய அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கருத்த தேகம், கைகளில் வில் அம்பு, கொடூர முகத்துடன் இருப்பவர்கள் சாண்டினல் பழங்குடியினர். கற்கால நாகரீகத்தின் எச்சமாக இன்றும் அந்தமானின் வடக்கே உள்ள சாண்டினல் தீவில், இவர்கள் வசித்து வருகின்றனர். பல்லாயிரம் ஆண்டுகளாக வெளியுலக தொடர்பே இல்லாமல் இருக்கும் இவர்கள், உலகின் அதிபயங்கர பழங்குடினர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர். காரணம், செண்டினல் தீவில் காலடி எடுத்து வைக்கும் எவரின் உயிரையும், அடுத்த நிமிடமே, இவர்கள் காற்றில் பறக்க விட்டுவிடுவார்கள். தற்போது, இவர்களின் அம்புக்கு பலியாகி இருப்பது, அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஆலென் காவ் என்ற 27 வயதே ஆன இளைஞர். 

கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக சென்றபோது, அவர் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, அமெரிக்கா கொடுத்து வரும் நெருக்கடி காரணமாக, ஜான் ஆலென் காவின் உடலை மீட்க இந்திய கடற்படை தீவிரமாக போராடி வருகிறது. எனினும், சாண்டினல் தீவை சுற்றி வர முடிகிறதே தவிர, இந்திய கடற்படையால் அவர்களை நெருங்கக்கூட முடியவில்லை.  

யார் இந்த சாண்டினல் பழங்குடியினர்... ஏன் இவர்கள் இவ்வளவு உக்கிரமாக இருக்கிறார்கள்... சாண்டினல் பழங்குடியின மக்களிடம்தான் உலகின் ஒட்டுமொத்த மனித வரலாறும் புதைந்து கிடக்கிறது. ஆனால், அவர்களை பற்றி பல நாடுகளை சேர்ந்தவர்கள் ஆய்வு செய்தும் இதுவரை ஒரு துரும்பைக் கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களை எப்படி அணுகினாலும் பதிலாக வருவது வில்லும் அம்பும் மட்டுமே.

கடந்த 2004-ம் ஆண்டு சுனாமியின்போது இந்த தீவு அழிந்துவிடும் என நினைத்தவர்களுக்கு எதிர்மறையான பதில்களே கிடைத்தது. ஆழிப்பேரலையில் பழங்குடியினருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. சுனாமியை முன் கூட்டியே உணர்ந்து, உயரமான இடங்களுக்கு சென்று அவர்கள் தப்பித்திருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இந்த தீவை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவித்துள்ள இந்திய அரசு, கடற்கரையைச் சுற்றி 3 மைல் தொலைவுவரை சுற்றுலாப் பயணிகள் நுழைய தடை விதித்திள்ளது. கடந்த 1997 ஆம் ஆண்டு, இந்த தீவுக்கு அருகில் சென்ற சிலர், பழங்குடியினரிடம் தேங்காயை தூக்கிப் போட்டனர். இதுவே,உலகம் தோன்றியதிலிருந்து, வெளியுலக மனிதர்களுக்கும் அவர்களுக்குமான ஒரே தொடர்பு. இப்படி, அபாயகரமான பகுதியாக காணப்படும் இந்த தீவில் தான், ஜான் ஆலென் காவின் தனது உயிரை இழந்துள்ளார். சாண்டினல் தீவைப் பற்றி உலகமே பல சர்ச்சைக்குரிய கதைகளைக் கூறி வருகிறது. ஆனால், அந்த பழங்குடியின் மக்களோ உலகிற்கு சொல்வது ஒன்றே ஒன்று தான் “உத்தரவின்றி உள்ளே வராதீர்கள்”.
Image