சனி, 11 பிப்ரவரி, 2023

மு.க.ஸ்டாலின் உடன் மகாராஷ்டிரா உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே திடீர் சந்திப்பு

 9 2 23

மு.க.ஸ்டாலின் உடன் மகாராஷ்டிரா உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே திடீர் சந்திப்பு

மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு தேசிய அரசியலில் கவனத்தைப் பெற்றுள்ளது.

நாடாளுமன்றத்தில் நடைபெற்று மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரில், தி.மு.க எம்.பி.க்கள் கனிமொழி, திருச்சி சிவா ஆகியோர் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினர்.

தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் ஆளுநர்கள் மாநில அரசுகளுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்று கனிமொழி மக்களவையில் விமர்சனங்களை முன்வைத்தார். அதே போல, மாநிலங்களவையில் பேசிய திருச்சி சிவா, உப்புமா நகைச்சுவைக் கதையைக் கூறி, வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில், எங்களுடைய தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலில் கூட்டணி கட்சிகள் ஒன்றினைந்து பா.ஜ.க அரசு மாற்றப்படும் என்று கூறினார்.

இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடன் மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் ஆதித்ய தாக்கரே சந்தித்து பேசினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

மகாராஷ்டிரா முன்னால் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் மகனும் முன்னாள் அமைசருமான ஆதித்ய தாக்கரே இன்று (பிப்ரவரி 10) சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள் முதல்வர் மு.க. ஸ்டாலின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, அமைச்சர் உதயநிதி, தி.மு.க எம்.பி டி.கே.எஸ் இளங்கோவன் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பின் போது, மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வம் எழுதிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆதித்யா தாக்கரேவுக்கு பரிசாக அளித்தார். அதேபோல, பால் தாக்கரேவும், கலைஞர் கருணாநிதியும் இருக்கும் புகைப்படத்தை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆதித்யா தாக்கரே பரிசாக அளித்தார்.

உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்திருப்பது தேசிய அரசியலில் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்த தீடீர் சந்திப்பு 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க அரசுக்கு எதிராக கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முன்னோட்டமா என்ற பேச்சுகளும் எழுந்துள்ளன.


source https://tamil.indianexpress.com/tamilnadu/uddhav-thackerays-son-aditya-thackeray-meets-mk-stalin-attention-draws-in-national-politics-591492/