ஞாயிறு, 2 ஜூலை, 2023

பாலுறவு சம்மத வயதை 16-ஆக குறைக்க வேண்டுமாம்! மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் கேட்கிறது!

 

பாலுறவு சம்மத வயதை 16-ஆக குறைக்க வேண்டுமாம்! மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் கேட்கிறது!

பருவ வயது சிறார்கள் குற்றவாளிகளாக ஆக்கப்படும் அநீதியை தடுக்க பாலுறவு சம்மத வயதை 16-ஆக குறைக்க வேண்டும் என மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. 

சிறார்கள் பாலியல் உறவு கொள்வது தற்போது பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. குறிப்பாக, சிறார் ஒருவரின் முழு சம்மதத்துடன் வயது வந்த ஒருவர் பாலியல் உறவு கொண்டாலும், போக்சோ சட்டத்தின் கீழ் அது குற்றமாக பார்க்கப்படுகிறது.

சில சமயங்களில், சிறார்கள் பாலியல் உறவில் ஈடுபடும்போது சிறுமியின் பெற்றோர் அல்லது உறவினர் புகார் அளிக்கும்பட்சத்தில், பாலியல் உறவில் ஈடுபடும் சிறாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், சிறுமியின் பெற்றோர் அல்லது உறவினர் புகார் அளிக்கும் வழக்குகளில், முழு சம்மதத்துடன்தான் குற்றம்சாட்டப்பட்டவருடன் பாலியல் உறவு கொண்டதாக சிறுமிகள் பெரும்பாலான நேரங்களில் வாக்குமூலம் அளிக்கின்றனர்.

கடந்த 2012ஆம் ஆண்டு, போக்சோ சட்டத்தில், சிறார்கள் பாலியல் உறவு கொள்ள அனுமதிக்கும் வயது 16-இல் இருந்து 18-ஆக உயர்த்தப்பட்டது. இதனால், 16 வயதுக்கு மேற்பட்ட சிறார்கள் முழு சம்மதத்துடன் பாலியல் உறவு கொண்டாலும் அது குற்றமாக கருதப்பட்டு வருகிறது.

முன்னதாக, 1940ஆம் ஆண்டிலிருந்து 2012ஆம் ஆண்டு வரை, பாலுறவு சம்மத வயது 16-ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதை கருத்தில் கொண்ட பல்வேறு நீதிமன்றங்கள், “இளம் வயதினர், பாலியல் உறவு கொள்ளும் வழக்குகளை கையாள சட்டத்தில் சீர்திருத்தம் மேற்கொள்வது அவசியம்” என தெரிவித்தது.

போக்சோ சட்டத்தின் கீழ் பாலுறவு சம்மத வயதை தற்போதைய 18லிருந்து நாடாளுமன்றம் குறைக்க வேண்டும். அதற்கு, ஆவலுடன் காத்து கொண்டிருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தது.

வேறோர் வழக்கில், பாலுறவு சம்மத வயதை 16ஆக குறைக்க சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை வழங்கியது. இதை தொடர்ந்து, இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்,  போக்சோ சட்டம், 2012இன் கீழ் பாலுறவு சம்மத வயதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நாடாளுமன்றத்திற்கு  கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில், இதே கருத்தை மத்திய பிரதேச உயர் நீதிமன்றமும் முன்வைத்துள்ளது. பாலுறவு சம்மத வயதை 18-இல் இருந்து 16-ஆக குறைக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி பரிந்துரை செய்துள்ளார். பாலியல் வன்கொடுமை செய்ததாக 20 வயது இளைஞருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்த நீதிபதி தீபக் குமார் அகர்வால், இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

source https://news7tamil.live/the-age-of-sexual-consent-should-be-reduced-to-16-madhya-pradesh-high-court-asks.html