திங்கள், 3 ஜூலை, 2023

மருத்துவமனையின் அலட்சியப் போக்குதான் குழந்தையின் கை அகற்றப்பட்டதற்கு காரணம் – குழந்தையின் தாய் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி..!!

 

 அலட்சியமாக  செயல்பட்டு எனது குழந்தையின் கையை எடுக்க காரணமாக இருந்த செவிலியர்கள், மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தையின் தாய் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ராமநாதபுரத்தை சேர்ந்த தஸ்தகீர் என்பவர் தனது ஒன்றரை வயது மகனை தலையில் நீர் வருவதாக சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்தால் குழந்தையின் வலது கை அழுகிய நிலையில் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து  வலது கையை உடனே அகற்ற வேண்டும் இல்லையெனில் குழந்தையின் உயிருக்கு ஆபத்து என மருத்துவ தரப்பில் தெரிவித்தனர். அதனைத் குழந்தையின் வலது கை அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது. இந்த நிலையில்  நியூஸ் 7 தமிழுக்கு பிரத்தேக பேட்டி அளித்த குழந்தையின் தாய் அஜீஷா தெரிவித்ததாவது..

” சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக தனது குழந்தையை அனுமதித்திருந்தோம். அங்கு கடந்த வியாழக்கிழமை குழந்தையின் வலது கையில் மருந்து செலுத்துவதற்காக  ஊசி (டிரிப்ஸ்) செலுத்திய போது குழந்தையின் கையின் விரல் பகுதியில் சிகப்பு நிறமாக மாறியது

இது குறித்து அங்கு இருந்த செவிலியரிடம் தெரிவித்தேன். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  தொடர்ந்து குழந்தையின் கையிலேயே அந்த ஊசி இருந்ததால் பலமுறை வலியுறுத்தியும் அதனை அகற்றவில்லை. தொடர்ந்து குழந்தை அழுது கொண்டே இருந்ததால் வேறு வழி இல்லாமல் வேறு ஒரு செவிலியரிடம் தெரிவித்து அந்த ஊசியை அகற்றினேன்.

அதற்குள்ளாக குழந்தையின் பாதி கை  சிகப்பு நிறமாக மாறி கை அசைவின்றி இருந்தது. மேலும் குழந்தையின் கை கருப்பு நிறமாக மாறி அசைவின்றி இருந்தால் இது குறித்து இரவு மருத்துவரிடம் தெரிவித்தேன். அப்போதும் உரிய நடவடிக்கை எடுக்காமல் மருந்து போட்டால் சரியாகிவிடும் என்று தெரிவித்தனர்.

பின்னர் சனிக்கிழமை வரை அங்கேயே இருந்தும் எனது மகனின் கையில் அசைவு இல்லாததால் மீண்டும் மருத்துவரிடம் தெரிவித்தேன். அப்போது ஸ்கேன் எடுத்து பார்த்த போது தான் எனது மகளின் கை அழுகிவிட்டதாக தெரிவித்தனர். உடனடியாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் இல்லாவிட்டால் குழந்தையை காப்பாற்றுவது கடினம் என்று தெரிவித்தனர்

ஆனால் எனது குழந்தையின் கை அழுகியதற்கு யார் பொறுப்பு யார்  என்று சொல்லவில்லை. குழந்தைக்கு ஏற்கனவே இருந்த பாதிப்பு காரணமாக இப்படி ஏற்பட்டிருக்கலாம்  என மழுப்பலான பதில்களை மருத்துவமனை தரப்பில் தெரிவித்தார்கள். செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களின் அலட்சியப் போக்கு தான் எனது குழந்தையின் கை பாதிக்கப்பட்டதற்கு காரணம்.

சனிக்கிழமை இரவு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தோம். இங்கு எனது குழந்தையின் வலது கையை முழுமையாக அகற்றி விட்டனர். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்காமல் அலட்சியப் போக்குடன் செயல்பட்டு எனது குழந்தையின் கையை எடுக்க காரணமாக இருந்த செவிலியர்கள், மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

இது தொடர்பாக இதுவரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. இன்று இது குறித்து புகார் அளிக்க உள்ளோம். ராஜீவ் காந்தி மருத்துவமனை நிர்வாகம் இது போன்று தான் அலட்சியமான போக்குடன் அங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை அணுகுகிறார்கள். தமிழக அரசு தான் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக இந்த சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள குழு மூன்று நாட்களுக்கு பிறகு தான் விசாரணையை முடிக்கும் என்று கூறுகிறார்கள்

ஒரே நாளில் அந்த விசாரணை நடத்தி யார் தவறு செய்தார்கள் என்பதை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை உரிய எடுக்க வேண்டும். எனது குழந்தைக்காக தான் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து சென்னையில் வந்து தங்கி மருத்துவமனையில் கடந்த ஓர் ஆண்டாக சிகிச்சையில் பெற்று வருகிறோம். ஆனால் எனது குழந்தையின் கை இப்படி பாதிக்கப்பட்டது  வேதனையாக உள்ளது. கை இல்லாமல் எனது குழந்தையின் எதிர்காலம் கேள்விக் குறியாக உள்ளது. என்னைப்போல் இனிமேல் எந்த ஒரு பெற்றோரும் குழந்தையும் பாதிக்கப்படக்கூடாது. அதற்கு உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என” குழந்தையின் தாய் தெரிவித்தார்


source https://news7tamil.live/childs-arm-amputated-due-to-negligence-of-hospital-childs-mother-exclusive-interview-to-news-7-tamil.html