திங்கள், 3 ஜூலை, 2023

மக்கள்தான் எங்களின் பலம்..” – தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ட்வீட்.!!

 

”எங்களது கட்சிக்கு இது ஒன்றும் புதிதல்ல.. மக்கள்தான் எங்களின் பலம்..” என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வந்தது. இந்நிலையில் மூத்த அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, தனக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏ-க்களை, தன் பக்கம் இழுத்து, பாஜகவுடன் இணைந்து மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றினார்.

இதனையடுத்து மகாராஷ்ட்ராவின் முதல்வராக ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். அதேபோல மகாராஷ்டிராவின் பலம் வாய்ந்த கட்சிகளில் ஒன்றான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாருக்கும், அவரது உறவினரும் அக்கட்சியின் முக்கியத் தலைவர்களின் ஒருவருமான அஜித் பவாருக்கும் இடையே பூசல் நிலவி வருவதாக கூறப்பட்டது. அஜித்பவார் பாஜகவில் இணையவுள்ளதாகவும் வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக சரத்பவார் அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு மகாராஷ்டிரா மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. சரத்பவாரின் இந்த அறிவிப்பை கட்சித் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை நிராகரித்து தீர்மானம் நிறைவேற்றினர்.

இந்த நிலையில் கடந்த ஜூன் 10ம் தேதி  தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 25வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைவர் சரத் பவார் கட்சியின் புதிய செயல் தலைவர்களாக சுப்ரியா சூலே மற்றும் ஃபிரபுல் படேல் ஆகியோர் நியமிக்கப்படுவதாக அறிவித்தார். அக்கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவராக இருந்த அஜித் பவாருக்கு எந்த பொறுப்பும் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் அஜித் பவார் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 30பேரை அழைத்துக் கொண்டு பாஜக மற்றும் ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனா தலைமையிலான கூட்டனியில் தன்னை இணைத்துக் கொண்டார். இதனையடுத்து மகராஷ்ட்ரா மாநில அரசின் துணை முதல்வராக அஜித் பவார் பொறுப்பேற்றுக் கொண்டார்.  மேலும் அவரது ஆதரவாளர்கள் 8பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது..

இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் இந்தியப் பிரதமர்  நரேந்திர மோடி, தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு முடிந்து போன கட்சி என கருத்து தெரிவித்திருந்தார். மேலும் அவர் தேசியவாத காங்கிரஸ் மீது நீர்ப்பாசன புகார் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்; ஆனால் தற்போது எனது கட்சியினர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து அமைச்சராகியுள்ளனர்.

இதன் மூலம் எங்கள் கட்சி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் உண்மைத்தன்மை இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது. எங்களது உள் கட்சிப் பிரச்னைகள் குறித்து பேச ஜூலை 6ம் தேதி அனைத்து தலைவர்களையும் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தேன். ஆனால் அதற்குள் சிலர் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்

எம்எல்ஏக்கள் கட்சி தாவுவது எங்களது கட்சிக்கு புதிது கிடையாது.  1980-ல் கட்சியில் இருந்து 58 எம்எல்ஏக்கள் வெளியேறி வெறும் 6 எம்எல்ஏக்கள் மட்டுமே என்னுடன் இருந்தனர். பின்னர் மீண்டும் கட்சியை பலப்படுத்தி, எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை உயர்த்தினேன். எங்களது பலம் மக்கள் தான். அவர்கள் தான் எங்களை தேர்ந்தெடுத்துள்ளனர். 3 நாட்களுக்குள் எதிர்க்கட்சி தலைவர் குறித்து காங்கிரஸிடமும், உத்தவ் தாக்கரேவிடம் பேசவுள்ளோம்.

இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலர் நபர்களிடமிருந்து எனக்கு நிறைய அழைப்புகள் வருகின்றன. இன்று நடந்தவைப் பற்றி நான் கவலைப்படவில்லை. முன்னாள் மகாராஷ்டிர முதல்வர் ஒய்.பி.சவானிடம் நாளை ஆசி பெற்று, பொதுக்கூட்டம் நடத்துவேன்.” என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.


source https://news7tamil.live/this-is-nothing-new-people-are-our-strength-nationalist-congress-president-sarath-pawar-tweet.html