தமிழகத்தில் மகளிருக்கு மாதம் ரூ1000 உதவித்தொகை வழக்கும் திட்டத்திற்கு கலைஞர் பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், இத்திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்காக விண்ணப்ப படிவம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு மாதம் ரூ1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருந்த்து. தற்போது ஆட்சிக்கு வந்து 2 வருடங்களை நிறைவு செய்துள்ள திமுக அரசு வரும் செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உதவித்தொகை திட்டத்தை தொடங்க உள்ளது.
கலைஞர் மகளிர் உதவித்தொகை திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்திற்காக தமிழக அரசின் சார்பில் ரூ7000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து இத்திட்டத்தில் பயனடைபவர்கள் ஆவணங்கள மற்றும் தகுதிகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியானது. அதன்படி, மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளர்களின் வயது 21 நிரம்பியவராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 2.5 லட்சத்துக்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.
அதேபோல் 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு, பெண் எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்கள், பெண் அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணபிக்கும் விண்ணப்ப படிவங்கள் வெளியிடப்பட்டுள்ளது. எந்த ரேஷன் கடையில் குடும்ப அட்டை உள்ளதோ அந்த கடைகளில் ரேஷன் கடைகளில் விண்ணப்பிக்க வேண்டும் என பல விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்ப படிவத்தில் விண்ணப்பதாரரின் பெயர், திருமண நிலை, தொலைபேசி எண், மின் இணைப்பு எண், ஆதார் எண், குடும்ப அட்டை எண், வாடகை வீடா அல்லது சொந்த வீடா உள்ளிட்ட 10 கேள்விகள் உள்ளன. மேலும் 18 வயதுக்கு மேல் உள்ள குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், சொத்து விவரம், நில உடமை மற்றும் வாகன விவரங்கள் விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ளன.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-govt-released-application-form-for-kalaigner-women-scheme-718944/