வியாழன், 20 ஜூலை, 2023

ஆளுனர் தமிழக அமைதிக்கு அச்சுறுத்தல் : தகுதி நீக்கம் செய்ய தி.மு.க கோரிக்கை

 

Governor Stalin
ஆளுனர் ஆர்,என்ரவி – முதல்வர் மு.க.ஸ்டாலின்

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கியது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், திமுக தலைமையிலான தமிழக அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், ஒத்திவைப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக் கோரி, தி.மு.க சார்பில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தி.மு.க எம்.பி டி.ஆர் பாலு ஒத்திவைப்பு தீர்மானம் குறித்து தெரிவித்தார்.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து ஆளுனர் ஆர்.என்.ரவி – திமுக இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், திமுக குறித்தும் முதல்வர் ஸ்டாலின் குறித்து ஆளுனர் சர்ச்சை கருத்துக்களை தெரிவிப்பதும், அதற்கு திமுக பதிலடி கொடுப்பதும் தொடர்ந்து வருகிறது. இந்த மோதலில், தமிழகத்தில் ஆளும் திமுக அரசு கொண்டு வரும் திட்ட மசோதாக்களுக்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் ஆளுனர் ஆர்.என்.ரவியை மாற்றம் செய்ய வேண்டும் என்று திமுக தரப்பில் கடந்த சில மாதங்களாக மத்திய கோரிக்கை வைக்கப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கியது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக அரசு இடையே மோதல் வலுவடைந்துள்ளது. இதனால் ஆளுனர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று திமுக அரசு கோரிக்கை வைத்துள்ளது.

இது குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர் மு.க.ஸ்டாலின், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு எழுதிய கடிதத்தில், ஆளுனர் ஆர்.என்.ரவி வகுப்புவாத வெறுப்பைத் தூண்டும் விதமாக செயல்படுகிறார். இதனால்  தமிழகத்தின் அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தின் 159வது பிரிவின் கீழ் தான் எடுத்த பதவிப் பிரமாணத்தை ஆளுனர் ஆர்.என்.ரவி மீறுகிறார். மேலும் தமிழக அரசின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார் என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இதனிடையே தற்போது ஆளுனர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாக அனைத்துக்கட்சி கூட்டத்தின் போது கூறிய திமுக எம்.பி. டிஆர் பாலு  அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் இன்று (ஜூலை 20) தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்னதாக, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், டெல்லி அரசாணைக்கு எதிர்ப்பு, பாலசூர் ரயில் விபத்து உள்ளிட்ட பல பிரச்சனைகள் குறித்து திமுக எழுப்பும். மத்திய அமைப்புகளை பாஜக அரசு தவறாக பயன்படுகிறது. தற்போது திமுக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் கே.பொன்முடி ஆகியோர் அமலாக்க இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து  வருகின்றனர்.

அமலாக்கத்துறையினர் (ED) அவர்களை விசாரிக்கட்டும், இந்த விசாரணையில் யாராவது குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், அவர்கள் தண்டிக்கப்படட்டும். எல்லாவற்றையும் சட்டப்படி சந்திப்போம். ஆனால் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் இந்த சோதனைகள் மற்றும் விசாரணைகளை நடத்தும் விதம், அவர்கள் ஒரு தனிநபரின் அடிப்படை உரிமைகளை கூட மீறும் வகையில் உள்ளது.

அமைச்சர் பொன்முடி வழக்கில், அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு மிகவும் தாமதமாக உணவு வழங்கப்பட்டது. அவர் ஏற்கனவே இதய நோயாளி. இதையெல்லாம் மீறி, அவர் அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்துள்ளார் என்று கூறியுள்ள எம்.பி. டிஆர் பாலு பொது சிவில் சட்டம் தொடர்பான சர்ச்சையைப் பொறுத்தவரை, நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது UCC கொண்டு வரப்படாது என்று பாஜக கூறுவதை நம்ப முடியாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பாஜக தங்கள் தேர்தல் அறிக்கையில், 370வது பிரிவை ரத்து செய்வதாகச் சொல்லி, அதைச் செய்தார்கள். அதேபோல், ராம ஜென்மபூமி விஷயத்திலும், கோவில் கட்டும் பணி கிட்டத்தட்ட முடிந்து விட்டது. அவர்களின் பட்டியலில் எஞ்சியிருப்பது UCC மட்டும் தான். ஆனால் இந்த சட்டம் கொண்டுவரப்படாது என்று அவர்கள் பின்வாங்குகிறார்கள்.இந்த விஷயங்களில் பாஜகவை நம்ப முடியாது” என்று டிஆர் பாலு கூறியுள்ளார்.

தொடர்ந்து நாடாளுமன்றத்தில் மணிப்பூர் வன்முறை விவகாரத்தையும் திமுக எழுப்பும்,  என்று கூறிய அவர், பிரதமர் மற்ற நாடுகளுக்குச் சென்று உக்ரைனில் அமைதிக்கு அழைப்பு விடுக்கிறார். ஆனால் அவர் தனது சொந்த நாட்டில் உள்ள மாநிலமான மணிப்பூரைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மணிப்பூரில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் நேரத்தில் எதுவுமே நடக்காதது போல் நடந்து கொள்கிறார்கள்  

அதேபோல் மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டு வர உள்ள பல மாநில கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதா, மாநில உரிமைகளை பாதிக்கும் என்று கூறி திமுக இந்த மசோதாவை எதிர்க்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-dmk-govt-demands-tamil-nadu-governor-dismissed-in-parliament-monsoon-session-726185/