பாரதிய ஜனதா ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய தேவையில்லை, அவர்களே பொது சிவில் சட்டம் மூலம் தங்களது ஆட்சிக்கு குழப்பத்தை ஏற்படுத்திக்கொள்வர் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் முகைதீன் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் கே.எம்.காதர் முகைதீன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்றிருந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
பொது சிவில் சட்டத்தின் முன் வரைவு வெளிவந்த பிறகு அது குறித்தான முழுமையான கருத்துக்கள் கூற முடியும். அதே சமயத்தில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கு எதிர்க்கட்சிகள் ஒன்று இணைய தேவையில்லை, அவர்களே பொது சிவில் சட்டம் மூலம் தங்களது ஆட்சிக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளனர். இந்த சட்டம் நிறைவேறுமேயானால் அது பாஜக ஆட்சிக்கு சாவு மணியாகவும், அனைத்து தரப்பு மக்களும் பாஜக தூக்கி எறியும் வகையிலும் அமையும் எனக்கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் , தமிழக ஆளுநர், ஆளுநராக செயல்படவில்லை மாறாக தமிழகத்தை பாழாக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் அவர் ஆளுநர் இல்லை எனவும் பாளுநர் என கூறினார். இதுவரை தமிழகத்தின் சுயமரியாதையை கெடுக்கின்ற வகையில் எந்த ஆளுநரும் இவ்வாறு செயல்பட்டது இல்லை எனவும் குற்றம் சாட்டினார்.
மேலும், பொது சிவில் சட்டமானது எந்த தரப்பு மக்களையும் பாதிக்காத வகையில்
அமைந்தால் அதனை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஏற்றுக் கொள்ளும் எனவும்
அவர் தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் சட்டமன்ற
உறுப்பினர் அபூபக்கர் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
source https://news7tamil.live/opposition-parties-dont-need-to-unite-to-end-bjp-rule-by-common-civil-law-they-themselves-have-caused-confusion-kadar-mukaidin.html