புதன், 5 ஜூலை, 2023

பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பிரமுகர்: தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய ம.பி. முதல்வர் உத்தரவு!

 பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பாஜக பிரமுகரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் உத்தரவிட்டுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த நபர் மீது தேசியப் பாதுகாப்பு சட்டத்தின்  கீழ் மத்திய பிரதேச காவல்துறை  செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

மத்திய பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர் ஒருவர் அமர்ந்த நிலையில் இருக்க அவர்மீது பிரவேஷ் சுக்லா என்ற நபர் சிறுநீர் கழித்த சம்பவம் குறித்த விடியோ ஒன்று செவ்வாய்க்கிழமை சமூக வலைதளங்களில்  வேகமாகப் பரவியது.

இந்த வீடியோவை கண்டித்து எதிர்கட்சிகள் கடுமையான விமர்சித்த நிலையில் மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் கவனத்துக்கும் சென்றுள்ளது. இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “ பழங்குடி இனத்தை சேர்ந்த இளைஞர் மீது சிறுநீர் கழிக்கும் வீடியோ என கவனத்திற்கு வந்தது. சம்பந்தப்பட்ட  நபர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளேன்.” என பதிவிட்டிருந்தார்.

மத்திய பிரதேச முதல்வரின் உத்தரவுக்கு பின் சிறுநீர் கழித்த பிரவேஷ் சுக்லா மீது  இந்திய தண்டனை சட்டத்தின் 294, 504 ஆகிய பிரிவுகள், வன்கொடுமை தடுப்புச் சட்டம், தேசியப் பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட  பிரவேஷ் சுக்லா  ஆளும் பாஜகவைச் சேர்ந்தவர் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள்  குற்றம் சாட்டியுள்ள நிலையில் இதற்கு பதிலளித்த முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் ‘குற்றவாளிக்கு மதம், ஜாதி, கட்சி போன்ற பாகுபாடு கிடையாது. எனது கட்சியைச் சேர்ந்தவர் என்பதற்காக அவரை கைது செய்வதிலிருந்து காப்பாற்றப்பட மாட்டார்’ என தெரிவித்தார்.

இதுகுறித்து மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான கமல்நாத் தெரிவித்ததாவது..

“ பழங்குடியின மக்களுக்கு எதிராக இவ்வளவு மோசமான குற்றம் நாகரீக சமூகத்தில் நடப்பது வேதனை அளிக்கிறது. சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிக்கு பா.ஜ.க.வுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.  பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகளில் மத்தியப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது” என தெரிவித்தார்.

source https://news7tamil.live/bjp-leader-who-urinated-on-tribal-youth-mp-to-arrest-under-national-security-act-chief-ministers-order.html