2 9 23
பிப்ரவரி 15, 2017 அன்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் PSLV C37 ராக்கெட்டில் 103 செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்தபோது, அப்போதைய இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண் குமார் இந்த மிஷனை பற்றி சில வார்த்தைகள் பேச மேடைக்கு அழைத்தவர்களில் ஒரு இளம் விஞ்ஞானியும் இருந்தார்.
”இந்த இரண்டு செயற்கைக்கோள்களை – (முதல் இரண்டு நானோ செயற்கைக்கோள்கள்) உருவாக்க வழிகாட்டியதற்காக, அனைத்து துணை இயக்குநர்கள், திட்ட இயக்குநர்கள், SRC மற்றும் PSR உறுப்பினர்களுக்கு, நானோ செயற்கைக்கோள் குழு சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் இதை ஒன்பது மாதங்களில் செய்தோம்”, என்று அவர் தனது சுருக்கமான உரையில் கூறினார்.
தற்போது 46 வயதாகும் இளம் விஞ்ஞானி பி வீரமுத்துவேல் தனது தலைமைப் பண்புகளுக்காக இஸ்ரோவில் அங்கீகரிக்கப்பட்ட தருணம் அது.
40 வயதுக்குட்பட்ட 10-15 இளம் விஞ்ஞானிகள் குழுவுடன் இணைந்து, ஒன்பது மாதங்களுக்குள் இரண்டு இந்திய நானோ செயற்கைக் கோள்களை, PSLV C37 ஏவுவதற்காக வீரமுத்துவேல் ஆற்றிய பணி- 2019 இல் சந்திரயான் 2 தோல்வியடைந்த உடனேயே- சந்திரயான் 3 மிஷனுக்கு திட்ட இயக்குநராக அவர் வருவதற்கான முக்கிய படியாகும்.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளியில் படித்த, ரயில்வே ஊழியரின் மகனான வீரமுத்துவேல்- சொந்த வார்த்தைகளில் சொல்வதானால்- கடின உழைப்பு, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வேலை செய்வது, சுய ஒழுக்கம் ஆகியவை தான் அவரது உயர்வுக்கு காரணம்.
சந்திரயான் 3 லேண்டிங் மிஷன் வெற்றிக்கு முன்னதாக வீரமுத்துவேல் வெளியிட்ட ஒரு வீடியோ பதிவில் தான் கடந்து வந்த பாதைகளை பற்றி பேசியிருந்தார்.
“நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் விழுப்புரத்தில்தான். நான் பள்ளிப்படிப்பை விழுப்புரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். பள்ளியில் ஒரு சராசரி மாணவன். பள்ளிப் படிப்பை முடித்தபோது, எங்கு படிக்க வேண்டும், எதைப் படிக்க வேண்டும் என்ற எந்த ஒரு திட்டமும் எனக்கு இல்லை. எனது குடும்பத்தில் யாருக்கும் யாருக்கும் கல்வியில் பெரிய பின்புலம் இல்லை. நண்பர்களோடு சேர்ந்து டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தேன்.
படிக்கும்போது இன்ஜினியரிங் மேலே எனக்கொரு விருப்பம் வந்தது. அதனால் என்னால் 90 சதவீதம் மதிப்பெண் பெற முடிந்தது. மெரிட்டில் ஸ்ரீ சாய்ராம் இன்ஜினியரிங் கல்லூரியில் பி.இ. பட்டப்படிப்பில் சேர்ந்தேன். எல்லா செமஸ்டரிலும் முதல் அல்லது 2வது இடத்தில் வருவேன்.
அதேவேளையில் இந்த மதிப்பெண்ணுக்காக எல்லா நேரத்திலும் படித்துக் கொண்டே இருக்க மாட்டேன். படிக்கும்போது 100 சதவீத கவனத்துடன் நன்றாகப் புரிந்து படிப்பேன். அதுவே எனக்கு நல்ல மதிப்பெண்ணைப் பெற்றுத் தந்தது.
அதன் விளைவாக ஆர்.இ.சி. திருச்சி கல்லூரியில் எம்.இ. முதுநிலை படிப்பில் சேர்ந்தேன். இளநிலை போல் முதுநிலை படிப்பிலும் நன்றாகப் படித்தேன். 9.17 CGPA உடன் முதுநிலை படிப்பை முடித்தேன்.
கேம்பஸ் இன்டர்வியூ மூலமாக கோவை லக்ஷ்மி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனத்தில் சீனியர் இன்ஜினியராகப் பணியில் சேர்ந்தேன்.
அங்கு வேலை செய்து கொண்டிருந்த போதே ஏரோஸ்பேஸ் ரிசர்ச் மீது எனக்கு ஆழ்ந்த ஆர்வம் உண்டானது. அப்போதுதான் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் இன்ஸ்டிட்யூட் பெங்களூருவில், ஹெலிகாப்டர் டிவிஷன் எனப்படும் ரோட்டரி விங் டிசைன் அண்ட் ரிசர்ச் சென்டரில் டிசைன் விங் இன்ஜினியராக பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து எனது கனவான இஸ்ரோவில் பணி புரியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
முதலில் ப்ராஜக்ட் இன்ஜினியர் பின்னர் ப்ராஜக்ட் மேனேஜராக மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் உள்பட நிறைய ரிமோட் சென்ஸிங் அண்ட் சயின்டிஃபிக் சாட்டிலைட் மிஷன்களில் பணியாற்றியுள்ளேன்.
இருந்தும் நான் எனது ஆராய்ச்சிக் கனவைக் கைவிடவில்லை.
அதற்காக சென்னை ஐ.ஐ.டி.யில் பிஎச்.டி ஆராய்ச்சிப் படிப்பில் இணைந்தேன். வைப்ரேஷன் செபரேஷன் ஆஃப் எலக்ட்ரானிக் பேக்கேஜ் இன் சாட்டிலைட்ஸ் எனப்படும் தலைப்பில் நவீன ஆராய்ச்சியை மேற்கொண்டேன்.
எனது ஆராய்ச்சிக் கட்டுரைகள் சர்வதேச புகழ்பெற்ற இதழ்களில் பிரசுரமாகின. பல சர்வதேச அறிவியல் அரங்குகள் பேப்பர் பிரசன்டேஷன் செய்து வெற்றிகரமாக முனைவர் பட்டம் பெற்றேன்.
இஸ்ரோவின் முதல் நானோ சாட்டிலைட் குழுவை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பு கிடைத்தது. அதன்பின்னர் மூன்று நானோ சாட்டிலைட்டுகளை ஏவியுள்ளோம். சந்திரயான் 2 திட்டத்தின் அசோசியேட் ப்ராஜக்ட் டைரக்டராக இருந்தேன். சந்திரயான் 3 திட்டத்தில் எனக்கு திட்ட இயக்குநர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இது இஸ்ரோவுக்கு மிகப்பெரிய மிஷன், என்று வீரமுத்துவேல் அந்த வீடியோவில் கூறினார்…
இஸ்ரோவின் மூத்த ஓய்வுபெற்ற விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, 2016-17ல் முதல் இந்திய நானோ செயற்கைக்கோள் மிஷனில் வீரமுத்துவேலின் பணிதான் அவருக்கு ஒரு தலைவராக அங்கீகாரம் அளித்தது.
வீரமுத்துவேல் ஆரம்பத்தில் இருந்தே சந்திரயான் 2 திட்டத்தில் இருந்தார், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது தாமதமாகியது, இடையில் மற்றொரு திட்டத்திற்கு அனுப்பப்பட்டார்.
இது இந்திய நானோ செயற்கைக்கோள் திட்டத்தில் (INS) வேலை செய்து கொண்டிருந்தது. 40 வயதுக்குட்பட்ட இளம் விஞ்ஞானிகள் குழுவில் அவர் திட்ட இயக்குநராக இருந்தார். அந்த குழுவில் 15-20 விஞ்ஞானிகள் இருந்தனர், அவர்கள் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திட்டத்திற்கான உள்ளமைவைக் கொண்டு வந்தனர். அப்போது தான் அவரது தலைமைப் பண்புகளை நாங்கள் பார்த்தோம். இதுவே, சந்திரயான் தோல்விக்குப் பிறகு திட்ட இயக்குநராக அவர் வெளிவர உதவியது, என்று கோயம்புத்தூரில் உள்ள ஒரு அரசு பொறியியல் கல்லூரியின் படித்த முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானியும், இயக்குநருமான எம் அண்ணாதுரை கூறினார்.
ஜூலை 14 அன்று ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து எல்விஎம் 3 ராக்கெட்டில் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்ட பிறகு, ஒரு குழு வீரராக வீரமுத்துவேலின் குணங்கள் வெளிப்பட்டன.
சந்திராயன் 3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட பிறகு பிறகு மேடையில் பேச அழைக்கப்பட்டபோது, அவர் தனது முழு குழுவையும் குறிப்பாக தனது இணை திட்ட இயக்குனர் கே கல்பனாவையும் குறிப்பிட மறக்கவில்லை.
ஆகஸ்ட் 23 அன்று மாலை 6.03 மணிக்கு சந்திரயான் 3 லேண்டர் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கிய பின்னர் வீரமுத்துவேல் கூறுகையில், “இது மகிழ்ச்சியான தருணம், திட்ட இயக்குனராக இந்த இலக்கை அடைந்தது மிகுந்த மனநிறைவை அளிக்கிறது என்பதை குழுவின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
நான் ஓர் எளிமையான நபர். என்னால் இவ்வளவு தூரம் வர முடியும் என்றால் எல்லோராலும் முடியும். வாய்ப்புகள் எல்லோருக்கும் இருக்கின்றன. அதை நாம் எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறோம் என்பது நம் கைகளில் தான் இருக்கிறது.
என்னைப் பொறுத்தவரை சுய ஒழுக்கம், 100 சதவீதம் ஈடுபாடு அதுவும் எதிர்பார்ப்புகளற்ற ஈடுபாடு, கடின உழைப்பு மற்றும் நமக்கு இருக்கும் தனித்துவம் ஆகியன நிச்சயமாக வெற்றி தரும். கடின உழைப்பு பலனில்லாமல் போகவேபோகாது, என்கிறார் வீரமுத்துவேல்….
source https://tamil.indianexpress.com/india/chandrayaan-3-project-director-p-veeramuthuvel-isro-747596/