செவ்வாய், 5 செப்டம்பர், 2023

சனாதன விவகாரம் குறித்து காங்கிரஸ் விளக்கம் – ”நாங்கள் அனைத்து மதங்களையும் மதிக்கிறோம், ஆனால் அனைத்து கட்சிகளுக்கும் சுதந்திரம் உள்ளது!”

 

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய விவகாரத்தில், நாங்கள் அனைத்து மதங்களையும் மதிக்கிறோம், ஆனால் அனைத்து கட்சிகளுக்கும் சுதந்திரம் உள்ளது என காங்கிரஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 2ம் தேதி தமுஎகச சார்பில் சென்னையில் “சனாதன ஒழிப்பு மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “ இந்த மாநாட்டிற்கு சனாதன எதிர்ப்பு மாநாடு என்று பெயர் வைக்கவில்லை. சனாதன ஒழிப்பு மாநாடு என மிகச் சரியாக வைத்துள்ளீர்கள்.  சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதுதான் சிறந்தது. எப்படி டெங்கு, மலேரியா மற்றும் கோவிட் போன்றவற்றையும் ஒழித்துள்ளோமோ அதே போல சாதி மற்றும் ஏற்றத் தாழ்வுககளை ஊக்குவிக்கும் சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும்” என பேசியிருந்தார்.

ஆனால் பாஜகவினர் நாடு முழுவதும் ,சனாதன தர்மத்தை பின்பற்றும் 80% இந்துக்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், அமைச்சர் உதயநிதியோ, தாம் சனாதன தர்மத்தைதான் எதிர்க்கிறேன்; காங்கிரஸ் ஒழிக என பிரதமர் மோடி பேசுகிறார். அப்படியானால் காங்கிரஸ் கட்சியினரை படுகொலை செய்ய மோடி சொல்வதாக எடுத்துக் கொள்ளலாமா? ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான் திமுகவின் கொள்கை என திட்டவட்டமாக கூறியிருந்தார்.

இருந்த போதும் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக போராட்டம், போலீசில் புகார் என வட இந்திய பாஜகவினர் செயல்பட்டு வருகின்றனர். அமைச்சர் உதயநிதியின் சனாதனம் குறித்த பேச்சு நேற்று முதலே தேசிய அளவில் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபாலிடம், சனாதனம் பற்றிய அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு ‘இந்தியா’ கூட்டணி அமைதி காப்பது ஏன்? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கே.சி வேணுகோபால், சமதர்ம சமுதாயம் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு ஆகும். கருத்து சொல்ல ஒவ்வொரு கட்சிக்கும் சுதந்திரம் உண்டு. அனைவரது நம்பிக்கையையும் மதிக்கிறோம்” என்றார்.

source https://news7tamil.live/congress-statement-on-sanatana-issue-we-respect-all-religions-but-all-parties-have-freedom.html