திங்கள், 2 அக்டோபர், 2023

தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் 9 பேருக்கு தலா ரூ.25 லட்சம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் 9 பேருக்கு தலா 25 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள் என்ற தலைப்பில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகள் 9 பேருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன், மயில்சாமி அண்ணாதுரை, சந்திராயன்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல், ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி, இஸ்ரோ விஞ்ஞானிகள் நாராயணன், இராஜராஜன், சங்கரன், வனிதா, ஆசிர் பாக்கியராஜ் என மொத்தம் 9 விஞ்ஞானிகள் மற்றும் நூற்றுக்கணக்கான பள்ளி,கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விருது வழங்கினார்.

பின்னர் அவர்களை கவுரவித்துப் பேசிய முதலமைச்சர், இஸ்ரோ சிவன், மயில்சாமி அண்ணாதுரை போன்ற விஞ்ஞானிகள் பிறந்த மண் தமிழ்நாடு என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். மிகவும் சாதாரண ஊர்களில் பிறந்து அவர்கள் சாதனை படைத்திருப்பதாக புகழாரம் சூட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சந்திரயான் திட்ட இயக்குநர் விழுப்புரம் வீரமுத்துவேலின் பணி பெருமைக்குரியது என்றார்.

உலகத்தையே வியக்க வைத்த விஞ்ஞானிகள் தமிழ்நாட்டில் உள்ளனர் என்றும், தமிழனாக பிறந்த பெருமையை இன்று அடைந்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார். மேலும் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த 9 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தலா 25 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.


source https://news7tamil.live/isro-scientists-who-are-proud-of-tamil-nadu-will-be-awarded-rs-25-lakh-each-chief-minister-stalins-announcement.html