தெலுங்கானா மாநில தேர்தல் பரப்புரையில் பிரதமர் நரேந்திரமோடி தமிழ்நாட்டுக்
கோவில்களைப் பற்றிப் பேசியதற்கு கடும் கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமரின் பார்வை தான் தவறு என்று கூறியுள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவானர் அரங்கில் தமிழ்நாடு இந்து சமய
அறநிலையத்துறை சார்பில் “வள்ளலார் – 200” ஓராண்டு தொடர் அறநிகழ்வின் நிறைவு விழா தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் வள்ளலாரின் வாழக்கை வரலாறு மற்றும் தமிழ்நாடு முழுவதும் 52 வாரங்கள் நடத்தப்பட்ட வள்ளலார் முப்பெரும் விழா நிகழ்ச்சிகளை தொகுத்து அமைக்கப்பட்ட சிறப்பு புகைப்படக் கண்காட்சியினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து வள்ளலாரின் இரை அனுபவங்கள் என்னும் நூலை முதல்வர்
வெளியிட்டார்.கடலூர் மாவட்டம், வடலூரில் அமைக்கப்படவுள்ள வள்ளலார் சர்வதேச மையத்திற்கான ஆணையினை வள்ளலார் முப்பெரும் விழா சிறப்புக் குழுவின் தலைவர் பி.கே. கிருட்டிணராஜ் வானவராயரிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மக்கள்
நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், மத்திய சென்னை நாடாளுமன்ற
உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் கலந்து
கொண்டனர்.
பின்னர் மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
வள்ளலார் விழாவில் இங்கு நான் கலந்து கொள்வது 52 ஆவது நிகழ்ச்சியாகும்.
இது நிறைவு விழாவாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. என்னைப் பொறுத்தவரையில் இது நிறைவு விழா மட்டுமல்ல, நிறைவான விழாவாக நடைபெற்றுள்ளது.
வள்ளல் பெருமானாருக்கு நாம் ஆற்றவேண்டிய கடமையை, மரியாதையை நிறைவாக ஆற்றி இருக்கிறோம். அனைத்துயிரும் ஒன்று என்ற வள்ளல் பெருமானாரின் எண்ணத்தை இன்று நாம் விதைக்க வேண்டும். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்
வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 419 ஆவது வாக்குறுதியாக ‘வடலூரில் வள்ளலார்
சர்வதேச மையம்’ அமைக்கப்படும் என்று சொல்லி இருக்கிறோம்.
”சாதி சமய நல்லிணக்கத்தைப் பேணும் வகையில் அருட்பிரகாச வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்கப் போதனைகளைப் போற்றும் வகையில் இது அமையும்” என்று சொல்லப்பட்டு உள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரியாரையும் போற்றுகிறார்கள், வள்ளலாரையும் கொண்டாடுகிறார்கள் என்பதை சிலரால்
ஜீரணிக்க முடியவில்லை. திராவிட மாடல் அரசு என்று சொல்லிக் கொள்கிறார்கள். கோவில்கள் அனைத்தையும் பொன்போல போற்றிப் பாதுகாக்கிறார்களே. இவர்களை என்ன சொல்லி குற்றம் சாட்டுவது என்பதும் சிலருக்கு குழப்பமாக இருக்கிறது.
இரண்டு நாட்களுக்கு முன்னால் தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் பரப்புரை செய்ய
வந்த பிரதமர் நரேந்திரமோடி தமிழ்நாட்டுக் கோவில்களைப் பற்றிப் பேசி
இருக்கிறார். அவரது பேச்சை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இந்தக் காலக்கட்டத்துக்குத் தேவையான மிகமுக்கியமான வழிகாட்டி தான் அருட்திரு
வள்ளலார் பெருமான். இறையியல் என்பது அவரவர் விருப்பம் ஆகும். அவரவர் தனிப்பட்ட உரிமை ஆகும். ஆனால் அந்த இறையியலை, ஆன்மிக உணர்வை ஒரு கூட்டம் அரசியலுக்கு பயன்படுத்தி அதன் மூலமாக குளிர்காயப் பார்க்கிறது.
அரசியல் வேறு ஆன்மிகம் வேறு என்பதை பகுத்தறிந்து பார்க்கும் பகுத்தறிவாளர்கள்
தான் தமிழ்நாட்டு மக்கள். அந்த மக்களைக் குழப்ப சிலர் முயற்சித்து வரும் காலத்தில் வள்ளலார் அவர்கள் நமக்கு அறிவுத் திறவுகோலாகக் காட்சி அளிக்கிறார்கள்.
பொறுப்பு வாய்ந்த இந்திய நாட்டின் பிரதமர் தவறான அவதூறு செய்தியை சொல்வது சரியா? ஒரு மாநில அரசின் செயல்பாடு குறித்து இன்னொரு மாநிலத்தில் சென்று பேசுவது முறையா? தர்மமா? திமுக ஆட்சிக்கு வந்தது முதல் கோவில்களை அரசு ஆக்கிரமித்தது போலவும் வருமானங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுவது போலவும் பொய்யை இந்திய நாட்டின் பிரதமர் கட்டமைக்க வேண்டிய அவசியம் என்ன? அவர் யாருக்காக பேசுகிறார்? யாருடைய குரலை எதிரொலிக்கிறார்? பிரதமரின் பார்வை தான் தவறு, நாங்கள் எல்லாருக்கும் எல்லாம் என்று ஆட்சி செய்து வருபவர்கள்.
இந்த இரண்டு ஆண்டு காலத்தில் 3,500 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள்
மீட்கப்பட்டுள்ளது. இது தவறா? 1000 கோவில்களுக்கு குடமுழுக்கு விழா நடத்தி இருக்கிறோம். இது தவறா? 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான, வரலாற்றுச் சிறப்புமிக்க 112 திருக்கோயில்களை பழமை மாறாமல் சீர்செய்வதற்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தவறா?
1250 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்கள் மற்றும் 1250 கிராமப்புறத் திருக்கோயில்களின் திருப்பணிகளையும் சேர்த்து இந்த நிதியாண்டில் மட்டும் 5078 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இது தவறா?
இறுதியாக கடலூரில் 17 ஏக்கரில் அமைய உள்ள பேருந்து நிலையத்திற்கு அருட்பெருஞ் ஜோதி வள்ளலார் பெயர் சூட்டப்பட உள்ளது என்கிற அறிவிப்பையும் வெளியிட்டார்.
source https://news7tamil.live/for-whom-does-the-prime-minister-speak-whose-voice-does-he-echo-is-the-prime-ministers-view-wrong-criticism-of-chief-minister-m-k-stal.html