கர்நாடக அரசு காவிரி நதிநீரை திறந்துவிடாத நிலையில் இன்று சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “எடப்பாடி பழனிசாமி பாரதிய ஜனதாவை பாதுகாக்கிறார்” எனக் குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியே வந்தாலும், பாஜகவை பாதுகாக்கும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியது அபத்தமானது.
காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிடம் பேசி முடிவுக்கு வர முடியாததால் தான்,உச்ச நீதிமன்றம் சென்றோம். மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு தான் காவிரியில் முழு பொறுப்பு உள்ளது என்பதை இபிஎஸ் ஒப்புக்கொண்டுள்ளார்
2018-க்கு பிறகு காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தான் தண்ணீரை பெற்று தரும் உரிமை உள்ளது. காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு நாம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
கர்நாடகாவிடம் நாம் பேசி எந்த பயனும் இல்லை, அதனால் தான் மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம்” என்றார். இது தொடர்பான தீர்மானத்தின்போது சட்டப்பேரவையில் பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், “இந்த விவகாரத்தில் நிரந்தர தீர்வை நோக்கி நகர வேண்டும். மாறாக கொஞ்சம் கொஞ்சமாக தீர்வு காண முயலக் கூடாது” என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.