டெட் தேர்வு எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சம வேலைக்கு சம ஊதியம், ஆசிரியர் நியமனத் தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம், இடைநிலை ஆசிரியர்கள், அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற நலச் சங்கம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது. கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து வரும், இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி விழுந்தனர்.
இதில் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கோரிக்கையாக, டெட் தேர்வுக்கு பின்னர் அரசு பணிக்கான நியமனத் தேர்வு எனப்படும் தனித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதாக உள்ளது.
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் டெட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட முதல் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் ஆசிரியர் பணி வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமனம் வழங்க வெயிட்டேஜ் என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டது. வெயிட்டேஜ் முறையிலான பணி நியமனத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியதால் அம்முறை கைவிடப்பட்டது.
அதன்பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனத்துக்கு புதிய முறை கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்துக்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.
இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் பணி நியமனத்துக்காக மீண்டும் ஒருபோட்டித் தேர்வு நடத்தக் கூடாது என்று டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களிடம் பெரும்பாலானோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த கோரிக்கை சில காலமாக வைக்கப்பட்டு வரும் நிலையில், இதற்கு முன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிப்பது, சலுகை மதிப்பெண் வழங்குவது, உள்ளிட்ட ஆலோசனைகள் விவாதிக்கப்பட்டன. ஆனால் அரசாணையை ரத்து செய்து, டெட் தேர்வு தேர்ச்சி அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்பது அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
இதனை வலியுறுத்தி, கடந்த ஒரு வார காலமாக உண்ணாவிரத போராட்டம் நடந்து வரும் நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சுவார்த்தை நடத்தி, நல்ல முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என உறுதியளித்தார்.
மேலும், ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை தலைமை செயலகத்தில் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரைக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து ஆசிரியர்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக் கொண்டார்.
இருப்பினும் ஆசிரியர்கள் போராட்டத்தை தொடர்ந்து வந்த நிலையில், இன்று காலை போலீசார் அவர்களை கைது செய்து திருமண மண்டபம் மற்றும் சமூகநலக் கூட்டங்களில் தங்கவைத்துள்ளனர்.
இந்தநிலையில், பகுதி நேர ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஊதிய உயர்வு கோரிக்கைக்கு அரசு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் டெட் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களின் போராட்டமும் வாபஸ் பெறப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 2013 டெட் தேர்வாளர்களின் பிரதான கோரிக்கையான அரசாணை எண்-149ஐ ரத்து செய்வது தொடர்பான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக போராட்டக் குழு தகவல் தெரிவித்துள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/teachers-protest-tet-exam-qualifiers-withdraw-their-hunger-strike-1511620