சனி, 13 ஏப்ரல், 2024

புதிய இந்தியாவுக்கு விடுதலை விடியல் தருக!”

 

ராகுல் காந்தி வருக! புதிய இந்தியாவுக்கு விடுதலை விடியல் தருக! என கோவை பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

கோவை செட்டிபாளையத்தில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இருவரும் ஒரே மேடையில் பரப்புரை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் இந்த பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

இந்தியாவின் நம்பிக்கை நாயகன் ராகுல் காந்தியை வரவேற்கிறேன். ராகுல் காந்தி அவர்களே வருக! புதிய இந்தியாவுக்கு விடுதலை விடியல் தருக! என அழைக்கிறேன். மக்களிடம் செல், மக்களிடம் இருந்து கற்றுக்கொள் என்ற அண்ணாவின் சொல்லின் வழியே அவர் மக்களுடன் நடந்து, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளார். சமூக நீதியின் அம்சங்கள் கொண்ட அந்த தேர்தல் அறிக்கைதான் இந்த தேர்தலின் கதாநாயகன்.

எப்போதும் வெளிநாட்டு டூரில் இருக்கும் பிரதமர் மோடி, தற்போது தேர்தல் என்பதால் தமிழ்நாட்டுக்கு அடிக்கடி டூர் வருகிறார். 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் செய்த எதையும் சொல்லி வாக்கு கேட்க முடியாத நிலையில் அவர் இருக்கிறார். குடும்ப அரசியல், ஊழல் கட்சி என கூறி வருகிறார். ஊழலுக்கு ஒரு பல்கலைக்கழகம் கொண்டு வந்தால் அதன் வேந்தராக பிரதமர் மோடி இருப்பார்.

கடும் நிதி நெருக்கடியிலும் பல மக்கள் நல, சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இந்தியாவில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இன்னும் எவ்வளவு நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியும் என்று நினைத்துப் பாருங்கள். ரூ.6,500 கோடி முதலீட்டுடன் கோவைக்கு வந்த ஒரு பெரிய நிறுவனத்தை மிரட்டி குஜராத்துக்கு மாற்றியது பா.ஜ.க. இதுதான் கோவை மீது பா.ஜ.க. வைத்துள்ள பாசம்.

பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்ற பா.ஜ.க. அரசின் நடவடிக்கையால் ஏழை மக்களின் பாக்கெட்டில் இருந்த பணம் பறிக்கப்பட்டது. பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைதியும், தொழில் வளர்ச்சியும் போய்விடும். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.


source https://news7tamil.live/welcome-rahul-gandhi-dawn-of-freedom-for-a-new-india-chief-minister-m-k-stalin.html#google_vignette