சனி, 13 ஏப்ரல், 2024

15 லுக்அவுட் நோட்டீஸ்... தவறான அடையாளத்தால் என்.ஐ.ஏ 3 நோட்டீஸ் வாபஸ்

 கடந்த ஆண்டு மார்ச் 19-ம் தேதி லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன் நடந்த போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டதாக 15 சந்தேக நபர்களைக் கைது செய்ய அவர்களின் புகைப்படங்களை பகிரங்கமாக வெளியிட்டது. அவர்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டு பல மாதங்கள் கழித்து, தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) பஞ்சாபைச் சேர்ந்த குறைந்தது 3 பேர் தவறாக அடையாளம் காணப்பட்டதாக இப்போது உறுதி செய்துள்ளது.

இந்த வன்முறையின் 5 வீடியோக்களில் இருந்து அடையாளம் காணப்பட்ட 15 பேருக்கு எதிராக உள்துறை அமைச்சகம் லுக் அவுட் சுற்றறிக்கையை வெளியிட்டது. இந்த வீடியோக்கள் கடந்த ஆண்டு மே மாதம் இங்கிலாந்துக்கு சென்ற என்.ஐ.ஏ குழு இந்த சம்பவம் மற்றும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ சம்பந்தப்பட்ட சந்தேகத்திற்குரிய பயங்கரவாத தொடர்பு குறித்து விசாரணை நடத்தும் போது வாங்கியது. இந்த வீடியோக்களில், லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திர்கு வெளியே மக்கள் கூடுவதையும், பின்னர் வன்முறையில் ஈடுபடுவதையும் காணலாம்.

இங்கிலாந்துக்கு சென்ற என்.ஐ.ஏ குழு இந்தியாவுக்குத் திரும்பியதும், 45 சந்தேக நபர்களின் வீடியோக்களையும் புகைப்படங்களையும் பொது களத்தில் பகிர்ந்து கொண்டதுடன், என்.ஐ.ஏ அவர்களை அடையாளம் காண உதவுமாறு கோரியது. பதிலுக்கு என்.ஐ.ஏ-வுக்கு சுமார் 850 அழைப்புகள் வந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன; ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவான ரா அமைப்பு (R&AW) குடிவரவுத் துறை ஆகியவை அடையாளம் காண உதவியது. குடிவரவுத் துறை முகம் அடையாளம் காணும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் 15 நபர்களில் சிலரை அடையாளம் காண உதவியதாக அறியப்படுகிறது, பின்னர், அவர்களுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டன.

வட்டாரங்கள் கூறுகையில், 15 சந்தேக நபர்களில், 3 பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டு என்.ஐ.ஏ-விடம் ஒப்படைக்கப்பட்டனர். ஆனால், ஒரு முழுமையான விசாரணைக்குப் பிறகு, மார்ச் 19 வன்முறையுடன் அவர்களை இணைக்கும் எதையும் என்.ஐ.ஏ கண்டுபிடிக்கவில்லை.  “விசாரணைக் குழு, சட்டக் குழு மற்றும் அப்போதைய தலைமை இயக்குநர் (என்ஐஏ) தினகர் குப்தாவுடன் விவாதித்த பிறகு, அவர்களின் லுக் அவுட் நோட்டீஸ்களை முடிக்க முடிவு செய்தது” என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது.

மத்திய உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட லுக் அவுட் நோட்டீஸில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நபர் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க உதவுகிறது.

லண்டனில் உள்ள இந்திய தூதரகம் மார்ச் 19, 2023-ல் சுமார் 50 பேர் கொண்ட குழுவால் தாக்கப்பட்டது, அவர்கள் கிரிமினல் அத்துமீறல், இந்திய தேசியக் கொடியை அவமரியாதை செய்தல், பொதுச் சொத்துக்களை நாசம் செய்தல், தூதரக அதிகாரிகளை காயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டனர். தூதரக அதிகாரியால் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரில் அடையாளம் காணப்பட்ட தாக்குதலை நடத்தியவர்கள் இங்கிலாந்தின் தல் கல்சாவைச் சேர்ந்த குர்சரண் சிங், காலிஸ்தான் விடுதலைப் படையைச் சேர்ந்த அவதார் சிங் கந்தா; மற்றும் ஜஸ்விர் சிங் உள்ளிட்டோர் அடங்குவர்.

“கந்தா ஜூன் மாதம் பர்மிங்காமில் இறந்தார், அவரது வழக்கு பதிவுக்காக அவரது இறப்புச் சான்றிதழைப் பெற என்.ஐ.ஏ சம்பந்தப்பட்ட துறையுடன் தொடர்பு கொண்டுள்ளது” என்று ஒரு அதிகாரி கூறினார். 

இங்கிலாந்து சம்பவம் தொடர்பான விசாரணையின் போது, இந்தியாவுக்கு எதிராக குரல் எழுப்பியும் காலிஸ்தான் ஆதரவு முழக்கமிட்டும் போராட்டக்காரர்களைத் தூண்டியதாகக் கூறப்படும் காந்தாவுடன் தொடர்பில் இருந்ததைக் கண்டறிந்த வாரிஸ் பஞ்சாப் டி தலைவர் அம்ரித்பால் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் ஒன்பது பேரை அசாமின் திப்ருகார் சிறையில் என்.ஐ.ஏ விசாரித்தது. “ஆகஸ்ட் 1, 2023-ல் தாக்குதல் நடத்தியவர்களில் சிலரை அடையாளம் கண்டுகொண்ட பிறகு, பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் என்.ஐ.ஏ-வால் பல இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனையில் சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்கள் அடங்கிய டிஜிட்டல் தரவுகள் கைப்பற்றப்பட்டன” என்று என்.ஐ.ஏ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


source https://tamil.indianexpress.com/india/uk-indian-embassy-attack-of-15-lookout-notices-nia-withdraws-3-because-mistaken-identity-4479070