புதன், 23 செப்டம்பர், 2015

"உன்னிடமில்லாத நவீனமான பொருள் என்னிடமிருக்கிறது"


உலகக் கார்ப்பரேட் முதலாளிகள் நமக்கு விற்பனை செய்யும் பொருட்களையெல்லாம் மிகச்சரியாக அவதானித்துப் பார்த்தால், அவர்கள் விற்பனை செய்வது அந்தப் பொருட்களையல்ல என்பதும், "உன்னிடமில்லாத நவீனமான பொருள் என்னிடமிருக்கிறது" என்று தற்பெருமை அடித்துக்கொள்ளும், மலினமான எண்ணத்தைத்தான் அவர்கள் விற்பனை செய்கிறார்கள் என்பதும் புரிந்துவிடும்.
ஒரு உதாரணத்துடன் பார்த்தால்தான் உங்களுக்கு இது தெளிவாகும்.
ஐபோன் 6 இப்போது சந்தைக்கு வந்து விற்பனையில் சக்கைபோடு போடுகிறது. இந்த ஐபோன் 6 மொபைல் போனை, நாம் நல்ல முறையில் பயன்படுத்தினால் எத்தனை வருடங்கள் பாவனை செய்யலாம் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். குறைந்தபட்சம் ஐந்து வருடங்களுக்கு மேல், பத்து வருடங்கள் வரை.
சரி, குறைந்தது இரண்டு வருடங்களாவது இதை நாம் பயன்படுத்தலாம் என்று வைத்துக்கொள்வோமே. ஆனால் பாருங்கள். ஐபோன் 6 சந்தைக்கு வந்து ஒருவருடம்கூட ஆகவில்லை. அதற்குள் அதன் அடுத்த மாடலான ஐபோன் 6S வெளிவரப்போகிறது. இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று பார்த்தால், தலைபோகும் எந்த மாற்றமும் அதில் இருக்காது. கமெராவில் ஒரு மாற்றத்தையும் போனில் சிறிய வளைவையும் ஏற்படுத்தியிருப்பார்கள். அவ்வளவுதான். ஆனால், ஐபோன் 6S வெளிவந்ததும் ஐபோன் 6 வைத்திருப்பவர்கள் கைகளெல்லாம் பரபரக்கும். மனம் ஓயாமல் படபடத்துக்கொண்டிருக்கும். இந்த வியாதி அடங்க வேண்டுமென்றால், ஐபோன் 6S கைகளுக்கு வந்தாக வேண்டும். நமக்கு இந்த நோயை உருவாக்கும் வைரஸ் வேறெதுவுமில்லை, மேலே நான் சொன்ன அந்த, "உன்னிடமில்லாத நவீனமான பொருள் என்னிடமிருக்கிறது" என்ற தற்பெருமை அடித்துக்கொள்ளும் எண்ணம்தான். இது ஐபோனுக்கு மட்டுமல்ல, சாம்சங்கிற்கும் இதுவே பொருந்தும். இது போன்களுக்கு மட்டுமல்ல, நாம் பாவனை செய்யும் அனைத்துப் பொருட்களுக்கும்தான். இதில் பலியாவதில் அனைவரும் அடக்கம். நானும் விதிவிலக்கல்ல. நம் மட்டமான இந்தச் சிந்தனைப் போக்கால் வெற்றி பெறுபவர்கள் கார்ப்பரேட்டட் முதலாளிகள் மட்டுமே!
நம் பலவீனங்களைக் காசாக்கி, அதைக் கோடி கோடியாகப் பெருக்குகிறார்கள் அவர்கள்.