தோட்டத்தில் ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் குவியல்... நெல்லையில் பரபரப்பு
நெல்லை: நெல்லை அருகே அனுமதியின்றி தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக போலீசார் ஓருவரை கைது செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ளது மேல இலந்தை குளம். அங்குள்ள செல்லப்பாண்டி என்பவரது தோட்டத்தில் ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேடடர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட எஸ்.பி விக்ரமன் உத்தரவின் பேரில் டிஎஸ்பி ராஜராம் தலைமையில் மானூர் இன்ஸ்பெக்டர் ஸ்டாலின், தனிப்படை இன்ஸபெக்டர் கருத்தையா, ஏட்டு கருணா சாமுவேல் மறறும் போலீசார் அந்த தோட்டத்துக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள தோடடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 127 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 52 டெட்டனேட்டர்கள் ஆகியவறறை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக செல்லப்பாண்டியிடம் விசாரணை நடத்தியதில் கயத்தார் அருகேயுள்ள உசிலங்குளத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவரிடம் இருந்து அதே ஊரை சேர்ந்த அய்யாத்துரை என்பவர் மூலம் வாங்கியதாக தெரிவித்தார். அவற்றை கல்குவாரிகளுக்கு பயன்படுத்துவதற்காக வாங்கி வந்ததாக தெரிவித்தார். இருப்பினும் அனுமதியின்றி வெடிபொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்து அய்யாத்துரையை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.