தமிழகத்தில் இருந்து அரபு நாடுகளுக்கு வாழைப்பழ ஏற்றுமதி 3 மடங்கு அதிகரிப்பு
சென்னை, தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 50 ஆயிரம் ‘ஹெக்டேர்’ பரப்பளவில் வாழை சாகுபடி நடந்து வருகிறது. மாறிவரும் நவீன விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப, வாழை சாகுபடியில் ஒரே சீரான அளவில் வளரக்கூடிய திசு கலாசார முறையை (ஜி-9 தொழில்நுட்பம்) தமிழக தோட்டக்கலைத் துறை அறிமுகப்படுத்தியது. வெளிச்சந்தைகளில் ரூ.13-க்கு விற்பனை செய்யப்படும் திசு வாழை கன்று, தோட்டக்கலைத்துறை 50 சதவீத மானியத்தில் ரூ.6.50-க்கு விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.
அதோடு வாழை விளைச்சலை அதிகரிப்பது, அதிக வருவாய் ஈட்டுவது போன்றவை குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகளையும் தோட்டக்கலைத்துறை வழங்கி வருகிறது. முதலில் தேனி மாவட்டத்தில் தொடங்கப்பட்ட திசு வாழை சாகுபடி, பின்னர் தூத்துக்குடி, கோவை, கடலூர், திண்டுக்கல் உள்பட பல மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. புகை போட்டு வாழைத்தார்கள் பழுக்கவைக்கப்பட்டுவந்த சூழ்நிலையில், அதிலும் தோட்டக்கலை துறை நவீன யுக்தியை புகுத்தி உள்ளது.
பழங்களின் சத்து குறையாமல் ‘ரைபனிங் யூனிட்’ என்ற பழுக்கவைக்கும் கூடங்கள் மூலம் திசு வாழைகள் பழுக்க வைக்கப்படுகின்றன. இவ்வாறு பழுக்க வைக்கப்படும் பழங்கள் 5 நாட்கள் வரை அழுகாமல் தாக்குப்பிடிக்கும். தோட்டக்கலைத்துறையின் இந்த நவீன முயற்சிகளால், வாழை விவசாயிகள் ஹெக்டேருக்கு ரூ.2 லட்சம் வரை லாபம் ஈட்டி வருகின்றனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு வாழைப்பழ உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் கருப்பையா, பொதுச்செயலாளர் ஜி.அஜிதன் ஆகியோர் கூறியதாவது:-
விவசாயிகள் நலனில் அக்கறையோடு தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை விளங்கி வருகிறது. தோட்டக்கலைத் துறை ஆதரவால், தமிழ்நாட்டில் வாழைப்பழ உற்பத்தியில் புரட்சி ஏற்பட்டுள்ளது. முன்பு வெளிநாடுகளுக்கு வாழைத்தார்களாக ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது 3 கிலோ, 5 கிலோ, 12 கிலோ என்று 3 விதமான அட்டை பெட்டிகளில் வாழைப்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
சவுதி அரேபியா, துபாய், குவைத் உள்பட அரபுநாடுகளுக்கு கடந்த ஆண்டு 200 கண்டெய்னர்கள் மூலம் 4 ஆயிரத்து 300 டன் வாழைப்பழம் ஏற்றுமதி செய்யப்பட்டது. வாழை விளைச்சல் அதிகரித்ததன் மூலம் இந்த ஆண்டு 12 ஆயிரத்து 900 டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 3 மடங்கு அதிகம்.