புதன், 9 செப்டம்பர், 2015

அலி முஸ்லியார் - ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்ட முஸ்லிம் மதகுரு

இஸ்லாமியர்கள் வாங்கித் தந்த இந்தியச் சுதந்திரம்'s photo.

அலி முஸ்லியார் - ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்ட முஸ்லிம் மதகுரு
1921 ல் மலபார் பகுதியில் நடந்த சுதந்திர போராட்டத்தின் ஒரு பகுதியான கிலாபத் போராட்டத்தை வழி நடத்திய தலைவர்களில் ஒருவர் அலி முஸ்லியார். மலபார் பகுதியின் இஸ்லாமிய மதகுருவும் இவரே. பெரும் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தாலும் தீராத சுதந்திர தாகம் கொண்டிருந்தவர். அன்றைய மலபாரின் (இன்றைக்கு கேரளா மாநிலம்) காங்கிரஸ் தலைவர் MP நாராயண மேனன் அவர்களின் நண்பர்களில் ஒருவர்.
சவூதி அரேபியாவின் மக்கா மாநகரில் மார்க்க கல்வியை முடித்து, இலட்சத்தீவின் தலைமை மதகுருவாக பணியில் அமர்த்தப்பட்டவர். சுதந்திர போராட்ட சிந்தனையின்றி, தமது சுயநலனை மட்டும் அலி முஸ்லியார் கொண்டிருந்தால், சுகபோக வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம். ஆனால் இந்த நாட்டை ஆங்கிலேயரிடமிருந்து மீட்க வேண்டுமென்ற சிந்தனையில் தமது வாழ்க்கையை போராட்ட களமாக அமைத்துக் கொண்டவர். காங்கிரசின் பல தலைவர்களோடு நெருக்கமான உறவை கொண்டிருந்தவர்.
இந்திய சுதந்திர போராட்டம் கொழுந்து விட்டெரிந்த காலத்தில், மற்ற மதத்தவர்களின் வழிப்பாட்டு தலங்கள் மத வழிபாடுகளை மட்டும் செய்து கொண்டிருந்தன. ஆனால் முஸ்லிம்களின் மத வழிப்பாட்டு தலங்களான மசூதிகள் (பள்ளிவாசல்கள், மஸ்ஜித்கள்) மட்டுமே மத வழிபாடு மட்டுமின்றி ஆங்கிலேயனுக்கு எதிராக மக்களை அணிதிரட்டும் போராட்ட களங்களாகவும் இருந்தன.
மசூதிகளில் பிரசங்கம் நிகழ்த்திய அலி முஸ்லியாருடைய மத பிரசங்கத்தில் இந்திய சுயராஜ்யம் கொழுந்து விட்டெரிந்தது. இவருடைய அனல் தெறிக்கும் பேச்சை மாப்ளா முஸ்லிம்கள் உள்வாங்கி கொண்டு ஆங்கிலேயனுக்கு எதிராக அணி திரண்டு போராடினார்கள்.
மலப்புரம், பொன்னானி, திரூரங்காடி, சாசெரி, பெரிந்தள்மன்னா ஆகியன அலி முஸ்லியார் கட்டுப்பாட்டில் வந்தன. அலி முஸ்லியார் தலைமையில் ஆங்கிலேயர்களை எதிர்க்க தனி இராணுவம் அமைக்கப்பட்டது. இதனால் ஆவேசமடைந்த ஆங்கிலேயர்கள் அலி முஸ்லியார் படையை தோற்கடிக்க பல்வேறு யுக்திகளை கையாண்டு தோல்விகளையே தழுவினார்கள்.
மலபார் பகுதியில் தமது ஏகாதிபத்தியத்திற்கு சவால் விட்டு தனி அரசை நடத்துகின்ற அலி முஸ்லியாரை உயிரோடு விட்டால் நாட்டின் பிற பகுதிகளுக்கும் இத்தகைய போராட்ட வழிமுறைகள் பரவி விடுமென்று அஞ்சிய பிரிட்டிஷ் படை நயவஞ்சகமான முறையில் இவரை கைது செய்து கோயம்பத்தூரில் வைத்து தூக்கில் ஏற்றியது. இந்த தேசத்தை வெள்ளையனின் அடிமைத்தளையில் இருந்து விடுவிக்கும் தீரமிக்க போராட்டத்தில் அலி முஸ்லியாருடைய உயிர் பறிக்கப்பட்டது.
சொகுசான வாழ்க்கையை விட சொந்த நாட்டின் விடுதலையே பெரிதென்று எண்ணி தம் உயிரை இந்த தேச விடுதலைப்போராட்டத்திற்கு அர்ப்பணித்தார் அலி முஸ்லியார்.