மும்பையில் 17 வயது மாணவர். அவர் செய்து இருக்கும் தனது அட்டகாசமானச் செயலால் வடக்கு மும்பையில் ஒரு திடீர் ஹீரோவாக உருவாகியிருக்கிறார்.
மும்பை “சாதே’ நகரில் ஒதுக்குபுறமாக ஒரு சேரி பகுதி உள்ளது. இங்குள்ள குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டுமெனில் சேரிப் பகுதியை ஒட்டியுள்ள 50 அடி நீள சாக்கடையை கடந்து தான் செல்ல வேண்டியிருந்தது. இதனை சாதே நகரில் அடுக்கு மாடியில் வசிக்கும் 17 வயது இஷான் பல்பாலே என்கிற இளைஞன் தினசரி பார்த்திருக்கிறார். சீருடை அணிந்த குழந்தைகள் சாக்கடையில் இறங்கி பள்ளிக்கு செல்வதை பார்த்து தனது பெற்றோர்களிடமும், நண்பர்களிடமும் சமூக அமைப் பினர்களிடமும் முறையிட்டு இருக்கிறார். உள்ளூர் நகராட்சி களிடமும் இந்த விஷயம் சென்று இருக்கிறது.
ஆனால் ,அவர்கள் கடமையை செய்வதில் தமிழ்நாட்டை விட சிறந்தவர்கள். தப்பித்தவறிக் கூட அந்த சேரி பக்கம் சென்று பார்க்கவில்லை.
வெறுத்துப்போன இஷான் தனது சேமிப்புப்பணம், நண்பர்களின் கடன் என பெரும் பணம் திரட்டி சேரி குழந்தைகள் சாக்கடையை கடக்க 50 அடி நீளம், 5 அடி அகலத்தில் ஒரு பாலத்தையே கட்டிவிட்டார். அடிப்படையில் இவர் ஒரு சிவில் பொறியாளர் மாணவன் என்பதால் தனது முதல் புராஜக்டை பட்டம் வாங்காமலேயே செய்து அசத்தி உள்ளார். முழுக்க முழுக்க மரக்கட்டைகள் கொண்டே எட்டே நாட்களில் இந்த பாலத்தை கட்டிவிட்டார். தற்போது பள்ளிக் குழந்தைகள் மட்டுமின்றி சேரிப்பகுதிகளில் குடியிருக்கும் 15,000 மக்களுக்கும் இந்த பாலம் தான் சாக்கடையை கடக்க உதவி செய்கிறது.
பிற்பாடு இதே பாலத்தை பயன்படுத்தியே எம்.எல்.ஏக் களும் எம்.பிக் களும் ஓட்டு கேட்க வரலாம் யார் கண்டது. சரி, இஷான் பல்பலேவைப் பாராட்டலாம் என தொடர்பு கொண்டால், அவர் அடுத்தப் புராஜெக்ட்டில் பிஸியாக இருக்கிறாராம். அதாவது, சேரி க் குழந்தைகளுக்குக் கழிவறை கட்டும் பணியில். பலே ! பல்பாலே.
17 வயது காலேஜ் பையன்கள் பேருந்து மேல் ஏறி நடனமாடுவதும், டாஸ்மாக்கில் சரக்கு அடிப்பது எல்லாம் தமிழ்நாட்டில் மட்டும் தான் போலிருக்கிறது.