அமீர் கானின் பேச்சும் அரைமண்டை அறிஞர்களும்
மோடி அரசு பதவியேற்ற பிறகு இந்து மத அடிப்படைவாதிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. மாட்டுக்கறி வைத்திருந்தார் என்ற சந்தேகத்திலேயே முஸ்லீம் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். கல்புர்கி போன்ற முற்போக்கு எழுத்தாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். க்ரிஷ் கர்நாட்டை கொலை செய்வோம் என்று இந்துமத அடிப்படைவாதிகள் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்துமத அடிப்படைவாதி தேசபக்தனைப் போல் கொண்டாடப்படுகிறான். இது போன்ற சூழல் இந்தியாவின் சகிப்புத்தன்மைக்கு சவால் விடுவதால், எழுத்தாளர்களும், கலைஞர்களும் தங்களுக்கு கிடைத்த தேசிய விருதுகளையும், சாகித்ய அகதாமி விருதுகளையும் திருப்பி அளித்தனர். எழுத்தாளர்களின் இந்தச் செயல் அரசையும், நாட்டையும், அறிஞர்களையும் அவமதிப்பதாகச் சொல்லும் அரைமண்டைகள், மாட்டுக்கறிக்காக கொலை செய்வதும், எழுத்தாளர்களை படுகொலை செய்வதும் தேசத்தை அவமானப்படுத்துவதாக கூறுவதில்லை. அந்த விஷயத்தில் இந்த அரைமண்டை அறிஞர்கள் கள்ள மௌனம் காக்கின்றனர்.
நடிகர் ஷாருக்கான், இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதாக கூறினார். அவரைத் தொடர்ந்து நடிகர் அமீர் கானும் அதே கருத்தை தெரிவித்துள்ளார்.
சில தினங்கள் முன்பு டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமீர் கான், "இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பாதுகாப்பு இல்லாத அசாதாரண நிலை நிலவுகிறது. பாதுகாப்பில்லாத சூழலை மக்கள் அவ்வப்போது உணர்ந்து வருகின்றனர். சில நாள்கள் முன்பு என் மனைவி கிரண் என்னிடம், நாம் வேறு நாட்டிற்கு சென்று விடுவோமா, குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது என்று கூறினார். கிரண் பயப்படுவதில் உண்மை இல்லாமல் இல்லை" என்றார்.
மேலும், எழுத்தாளர்கள் விருதுகளை திருப்பித் தருவதை ஆதரித்த அவர், நாட்டில் உள்ள அனைவருக்கும் போராடுவதற்கு உரிமை உள்ளது. விருதுகளை திருப்பி அளிப்பதன் மூலம், எழுத்தாளர்களும், கலைஞர்களும் தங்களது எதிர்ப்பை அகிம்சை முறையில் வெளிப்படுத்துகின்றனர் என்றார்.
அமீர் கானின் இந்தப் பேச்சுக்கு அரைமண்டை அறிஞர்களும், இந்து மத அடிப்படைவாதிகளும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, சில மத பயங்கரவாதிகள் அமீர் கானின் உருவப் பொம்மையை எரிக்கவும் செய்தனர். அமீர் கான் ஒரு முஸ்லீம் என்பதால் மத அடிப்படைவாதிகள் அதனை மதரீதியான பிரச்சனையாக்கி பேசி வருகின்றனர்.
அமீர் கான் தான் முஸ்லீம் என்பதால் இந்தியாவின் இன்றைய சகிப்பின்மைக்கு காரணமாக இந்து மத அடிப்படைவாதிகளுக்கு எதிராக பேசினாரா? இந்தக் கேள்விக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் குறித்த அவரது கருத்தை தெரிந்து கொண்டாலே போதுமானது.
உலகிற்கே அச்சுறுத்தலாக உருவாகிவரும் ஐஎஸ் தீவிரவாதிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் குண்டு வைத்து 130 உயிர்களை பலிவாங்கினர். அது குறித்து கருத்து தெரிவித்த அமீர் கான்,
"இதுபோன்ற சம்பவங்களை எல்லாம் நினைத்துப் பார்க்கையில் இது இஸ்லாம் சார்ந்த நடவடிக்கைகளாக எனக்குத் தோன்றவில்லை. குர்ஆனை கையிலேந்திய ஒருவன் மக்களை கொல்வதை இஸ்லாம் சார்ந்த நடவடிக்கையாக அந்த நபர் கருதலாம். ஆனால், ஒரு முஸ்லிமாக இதைப்பார்க்கும் என்னால் இஸ்லாம் சார்ந்த அவனது செயலாக இதைப் பார்க்க முடியவில்லை.
அப்பாவி மக்களை கொல்பவர்கள் யாரும் முஸ்லிமாக இருக்க முடியாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். என்னைப் பொருத்தவரை அவன் ஒரு முஸ்லிமே அல்ல. நான் முஸ்லிம் தான் என்று கூறிக்கொள்ள அவன் முன்வரலாம். ஆனால், அவனை நாம் அப்படி அங்கீகரித்து விடக்கூடாது. அவன் தீவிரவாதி, ஒரு தீவிரவாதியாகவே அவனை அங்கீகரிக்க வேண்டும்.
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு மட்டுமல்ல, இதைப்போன்ற தீவிரவாத எண்ணம் கொண்ட அனைவருக்குமே இது பொருந்தும். இன்று, அது ஐ.எஸ். இயக்கமாக இருக்கலாம். நாளை, வேறேதாவது ஒரு இயக்கமாக இருக்கலாம். தீவிரவாத சிந்தனை என்பது கவலைக்குரிய விவகாரமாகவே எனக்குத் தோன்றுகின்றது.
இதுபோன்ற தீவிரவாத சிந்தனை எங்கிருந்து புறப்பட்டாலும் அதன் விளைவு எதிர்மறையாகவும், பேரழிவாகவும் தான் இருக்கும் என்றே நான் உணர்கிறேன்."
- என அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் நிலவும் சகிப்பின்மை குறித்து கருத்து தெரிவித்ததற்காக கொதிக்கும் இந்துமத அடிப்படைவாதிகள், ஐஎஸ் தீவிரவாதிகள் குறித்த அமீர் கானின் கருத்துக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? மாட்டுக்கறி வைத்திருந்ததாக சந்தேகித்து ஒருவரை அடித்தே கொன்ற இந்துமத அடிப்படைவாதிகளுக்கும், ஐஎஸ் தீவிரவாதிகளுக்குமிடையில் என்ன வேற்றுமை இருக்கிறது? இருவருமே ஒரே மட்டையுல் ஊறிய தீவிரவாத மட்டைகள் அல்லவா? விருதுகளை திருப்பியளிக்க தேவையில்லை, நாட்டின் மானம் போகிறது என்று அலறும் அரை மண்டை அறிஞர்கள் இது குறித்து என்ன சொல்கிறார்கள்?
அமீர் கானின் கருத்தையும், அமீர் கானையும் வரவேற்க வேண்டிய கடமை ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது.