வெள்ளி, 27 நவம்பர், 2015

பா.ஜ., பிரமுகர் கொலையில் ஓய்வு அதிகாரி உட்பட 6 பேர் கைது


பரமக்குடியில் பா.ஜ., ஒன்றிய இளைஞரணித் தலைவர் ரமேஷ் கொலையில் ஓய்வு பெற்ற கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரி உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
காளையார்கோவில் ஒன்றிய பா.ஜ., இளைஞரணி தலைவர் ரமேஷ், 30. இவர் பரமக்குடி அருகே முதுகுளத்துார் ரோட்டில் நவ., 23 ல் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். பரமக்குடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கூடுதல் எஸ்.பி., வெள்ளைத்துரை தலைமையில் தனிப்படை போலீசார் விசாரித்தனர்.
இந்த கொலையில் தொடர்புடைய பரமக்குடியை சேர்ந்த ஓய்வு பெற்ற கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் பாலகிருஷ்ணன், 58, தேவராஜ், 22, வேலுச்சாமி, 60, தவமணி, 56, சுரேஷ், மகேந்திரன், 42, ஆகிய 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கார்கள், 2 இரண்டு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
அவர்கள் பரமக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இதில் தொடர்புடைய பரம்பை பாலா, திருமுருகன், கருணாகரன் ஆகியோரை தேடி வருகின்றனர்.
விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: ரமேஷ் காட்டுபரமக்குடியில் கோழிக்கடை நடத்தினார். சென்ற மாதம் கோழிக்கடை முன் அவரது காரை நிறுத்தினார். அதில் பாலகிருஷ்ணனின் கார் மோதியது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ், பாலகிருஷ்ணன், அவரது டிரைவர் தேவராஜை தாக்கினார்.
இந்த முன்விரோதத்தில் மனைவியை பார்க்க காரில் சென்ற ரமேஷை, பொன்னையாபுரத்தை சேர்ந்த பரம்பைபாலா, வேலுச்சாமி, தேவராஜ், திருமுருகன், கருணாகரன் ஆகியோர் 2 இருசக்கர வாகனங்களில் பின் தொடர்ந்து சென்று வெட்டி கொலை செய்தனர். பின் வாகனங்களை பொன்னையாபுரத்தில் நிறுத்திவிட்டு,
பாலகிருஷ்ணனின் காரில் தப்பி சென்றனர்.அவர்களுக்கு ஆர்.எஸ்.மங்கலத்தை சேர்ந்த தவமணி அடைக்கலம் கொடுத்தார். மகேந்திரன் என்பவர் மூலம் அவர்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் கைது செய்தோம். மற்றவர்களை தேடி வருகிறோம், என்றனர்.
தகவல்
Mohamed Raisudeen