புதன், 25 நவம்பர், 2015

அந்த இன்டெர்வியூவில் அமீர்கான் பேசியது..


1. வன்முறை இல்லாத எந்த ஒரு போராட்டத்தையும் நான் ஆதரிக்கிறேன். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒரு விசயத்திற்கு எதிராக போராட உரிமை உள்ளது. அது அடுத்தவர்களை பாதிக்காமல், வன்முறை இல்லாமல், சட்டத்தை கையில் எடுக்காமல் இருக்க வேண்டும்.
2. விருதுகளை திருப்பி கொடுப்பவர்கள், இங்கே சகிப்புத்தன்மை குறைந்து வருவதை நினைத்து வருந்தியும், அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதுக்காப்பின்மையை பார்த்துமே இந்த முடிவை எடுத்துள்ளதாக நினைக்கிறன்.
3. உலகில் எங்கும் வன்முறைகள் நிகழலாம். ஆனால் ஒரு சமூகத்தில் பாதுகாப்புணர்வு அவசியம். அதை உறுதி செய்ய சில விஷயங்கள் வேண்டும் என்று நினைக்கிறேன், ஒன்று நீதி. ஒரு தவறோ அநியாயமோ நிகழும் போது அதற்கு நீதி வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் ஒரு சாதாரண மனிதரால் ஒரு சமூகத்தில் பாதுகாப்பாக உணர முடியும்.
இரண்டாவதாக, நம்மால் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் பிரதிநிதிகள் இந்த நீதியை நிலைநாட்ட முன்வர வேண்டும். அது நடக்காத போது ஒரு மனிதர் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவே உணர்வார். எது ஆளும் கட்சி, யார் அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்பதெல்லாம் முக்கியம் இல்லை.
4. 1984ல் நடந்ததும் மிகப்பெரிய அநீதி. ஆனால் 1984ல் நடக்கவில்லையா என்ற கேள்வியின் மூலம் இப்போது நிகழும் அநீதிகளை சரி செய்ய முடியாது.
5. இத்தனை ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்திருக்கிறோம் ஆனால் கடந்த சில மாதங்களில் என் மனைவி கிரண் தினசரி நாளிதழ்களை திறக்கவே பயப்பட்டார். வேறு எங்காவது போய்விடலாமா என்று கூட என்னிடம் கேட்டார். கடந்த சில மாதங்களாக நடந்து கொண்டிருப்பவை கடுமையான துயரத்தை ஏற்படுத்தக்கூடியவை. மன அழுத்தம் கூடுகிறது.
6. எந்த மதமுமே வன்முறையை போதிக்கவில்லை. அப்படி செய்பவர்கள் இந்துவாக இருந்தாலும், முஸ்லீம் ஆக இருந்தாலும் அந்த மதத்தை பின்பற்றவில்லை என்று தான் சொல்ல வேண்டும். நான் அப்படி தான் நினைக்கிறேன்.
7. இந்தியாவில் நிறைய இஸ்லாமியர்களும், இஸ்லாம் அமைப்புகளும் ISIS மற்றும் அது போன்ற தீவிரவாத இயக்கங்களை எதிர்த்து குரல் கொடுத்துள்ளனர்.
8. நான் இந்த நாட்டிற்கு அல்லது சமூகத்திற்கு பிரதிநிதி என்றால் அது ஒட்டுமொத்த மக்களுக்கும் தானே அன்றி குறிப்பிட்ட மதத்திற்கு மட்டுமல்ல. நான் பிறப்பால் முஸ்லீம் என்றாலும், நான் எல்லோருக்கும் சேர்த்துதான் குரல் கொடுக்கிறேன்.
9. அப்பாவி மக்களை கொல்லும் யாரும் முஸ்லீமாக இருக்கவே முடியாது. அவர்களை நாம் வெறும் தீவிரவாதியாக மட்டுமே நாம் பார்க்க வேண்டும்.
இவை தான் அமீர்கானின் கருத்துகள். இந்தியாவின் தற்போதைய நிலையை கண்டு குழப்பம் அடைந்திருக்கும் ஒருவர் இதை விட இந்த விஷயத்தை தெளிவாக கூற முடியுமா என்று தெரியவில்லை. இவை அனைத்தையும் இந்தியாவில் இருந்து தான் கூறி இருக்கிறார், இனியும் இதே நாட்டில் தான் இருக்கவும் போகிறார். அவரது பயம் நாட்டின் தற்போதைய நிலைமையை கண்டே அன்றி, தன்னுடைய சொந்த பிரச்சினைக்கானது அல்ல...
முடிவு உங்கள் சிந்தனைக்கே.
மொழி பெயர்த்த அந்த நல்ல உள்ளத்திற்கு நன்றி.