ஞாயிறு, 22 நவம்பர், 2015

Quran : மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன.

திருக்குர்ஆன் ***
தமிழாக்கம் : பி.ஜைனுல் ஆபிதீன் உலவி அவர்கள்.


அத்தியாயம் : 6
மொத்த வசனங்கள் : 165
கால்நடைகள் குறித்து அன்றைய அரபுகளிடம் பலவிதமான மூட நம்பிக்கைகள் இருந்தன. அவை இந்த அத்தியாயத்தின் 136, 138, 139, 143, 144 ஆகிய வசனங்களில் கண்டிக்கப்படுகிறது. எனவே இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயர் வந்தது.


அளவற்ற அருளாளனும்நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

51. "தமது இறைவனிடம், தாம் ஒன்று சேர்க்கப்படுவதை அஞ்சுவோருக்கு அவனன்றி பொறுப்பாளனோ, பரிந்துரைப்பவனோ17 இல்லை'' என்று இதன் மூலம் எச்சரிப்பீராக! இதனால் அவர்கள் (இறைவனை) அஞ்சுவர்.
52. தமது இறைவனின் திருப்தியை நாடி காலையிலும், மாலையிலும் அவனிடம் பிரார்த்திப்போரை நீர் விரட்டாதீர்! அவர்களைப் பற்றிய விசாரணையில் உமக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. உம்மைப் பற்றிய விசாரணையில் அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. எனவே அவர்களை நீர் விரட்டினால் அநீதி இழைத்தவராவீர்!
53. "நம்மில் இ(ந்த அற்பமான)வர்களுக்குத் தானா அல்லாஹ் அருள் புரிய வேண்டும்?'' என்று அவர்கள் கூறுவதற்காக அவர்களில் ஒருவர் மூலம் மற்றவரை இவ்வாறு சோதித்தோம்.484 நன்றி செலுத்துவோரை அல்லாஹ் நன்கறிந்தவன் அல்லவா?
54. (முஹம்மதே!) நமது வசனங்களை நம்புவோர் உம்மிடம் வந்தால் "உங்கள் மீது ஸலாம்159 உண்டாகட்டும். அருள் புரிவதைத் தன் மீது உங்கள் இறைவன் கடமையாக்கிக் கொண்டான். உங்களில் எவரேனும் அறியாமையின் காரணமாக தீமையைச் செய்து விட்டு, அதன் பின்னர் மன்னிப்புக் கேட்டு திருந்திக் கொண்டால் அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' எனக் கூறுவீராக!
55. குற்றவாளிகளின் பாதை தெளிவாகத் தெரிவதற்காக இவ்வாறே சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறோம்.
56. "அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்போரை வணங்குவதை விட்டும் நான் தடுக்கப்பட்டுள்ளேன்'' என்று கூறுவீராக! "உங்கள் மனோ இச்சைகளைப் பின்பற்ற மாட்டேன். (பின்பற்றினால்) வழிதவறி விடுவேன். நேர்வழி பெற்றவனாக ஆகமாட்டேன்'' என்றும் கூறுவீராக!
57. "நான் என் இறைவனிடமிருந்து வந்த சான்றுடன் இருக்கிறேன். நீங்கள் அதைப் பொய்யெனக் கருதுகிறீர்கள். நீங்கள் அவசரப்படுவது என்னிடம் இல்லை. அதிகாரம் அல்லாஹ்வுக்கே தவிர (எவருக்கும்) இல்லை.234 அவன் உண்மையை உரைக்கிறான். தீர்ப்பளிப்போரில் அவன் மிகச் சிறந்தவன்'' என்றும் கூறுவீராக!
58. "நீங்கள் அவசரப்படுவது என்னிடம் இருந்திருந்தால் எனக்கும், உங்களுக்குமிடையே காரியம் முடிக்கப்பட்டிருக்கும். அநீதி இழைத்தவர்களை அல்லாஹ் அறிந்தவன்'' என்றும் கூறுவீராக!
59. மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அவன் அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அதை அவன் அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில்303 உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில்157 இல்லாமல் இல்லை.
60. அவனே இரவில் உங்களைக் கைப்பற்றுகிறான். பகலில் நீங்கள் செய்வதை அறிகிறான். நிர்ணயிக்கப்பட்ட தவணை நிறைவு செய்யப்படுவதற்காக பகலில் உங்களை எழுப்புகிறான். உங்கள் மீளுதல் அவனிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்.