மாஸ்கோ,சவுதி அரேபியாவில் ஷியா பிரிவு மதத் தலைவர் நிமர் அல் நிமர் (வயது 56) உள்பட 47 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றியது உலகமெங்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சவுதி அரேபிய அரசுக்கு எதிரான சிறுபான்மை ஷியா பிரிவினரின் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்திய நிமர் அல் நிமர் மீது தேசத் துரோக குற்றச்சாட்டு சுமத்தி, மரண தண்டனை விதித்து நிறைவேற்றி இருப்பது, உலகமெங்கும் உள்ள ஷியா பிரிவினருக்கு ஆத்திரத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக ஷியா பிரிவினரை பெரும்பான்மையாக கொண்டுள்ள ஈரானும், ஈராக்கும் கொந்தளித்துள்ளன.சவுதி அரேபியாவுக்கு எதிராக ஈரானில் போராட்டம் வெடித்துள்ளது. தலைநகர் டெஹ்ரானில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தின் முன்பாக நூற்றுக்கணக்கானோர் கூடி, போராட்டம் நடத்தினர். அப்போது வன்முறை வெடித்தது. தூதரகத்தின் மீது நாட்டு வெடிகுண்டுகளும், பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டன.தூதரக அலுவலகத்துக்கு சிலர் தீ வைத்தனர். இதனால் அங்குள்ள மேஜை, நாற்காலி உள்ளிட்ட தளவாடங்கள் கொளுந்து விட்டு எரிந்தன. உள் அலங்காரங்கள் உருக்குலைந்து போயின. அங்குள்ள ஆவணங்களை போராட்டக்காரர்கள் சூறையாடினர். தாக்குதல் நடந்த நேரத்தில் அந்த தூதரகத்தில் அதிகாரிகளோ, ஊழியர்களோ இல்லை என்பதால் அவர்கள் தப்பித்தனர். தூதரகத்துக்கு தீ வைக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த சவூதி அரேபியா, ஈரானுடனான தூதரக உறவை துண்டித்துக்கொள்வதாக அறிவித்து உள்ளது. இதனால், இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் மேலும் அதிகரித்துள்ளதால், பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஈரானுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையே மத்தியஸ்தராக செயல்பட தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் இந்த விருப்பத்தை அந்நாட்டின் பெயர்வெளியிட விரும்பாத உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்ததாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.மற்றொரு ரஷ்ய தூதரக அதிகாரி ஒருவர் கூறும் போது, ஈரான் -சவூதி அரேபியா ஆகிய இருநாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளின் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய தயாராக உள்ளதாகவும் தெரிவித்தாக செய்தி வெளியிட்டுள்ளது.