செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

சிரியாவில் தொடரும் தாக்குதல்கள் : 140 பேர் பலி!


சிரியாவில் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சிரியாவில் கடந்த 4 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வரும் நிலையில் தீவிரவாதிகளின் ஆதிக்கம் பெருகியுள்ளது. நேற்று அல்-ஷக்ரா மாவட்டத்தில் உள்ள ஹோம்ஸ் நகரின் மையப் பகுதியில் நேற்று கார் குண்டு வெடித்தது. அதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல கார்கள் நொறுங்கின. கட்டிடங்கள் இடிந்தன. அதேபோன்று டமாஸ்கஸ் நகரிலும் கார் குண்டு வெடித்தது. இதுதவிர சாயிதா ஜினாப் என்ற ஷியா பிரிவினரின் வழிபாட்டு தலத்திலும் குண்டுகள் வெடித்தன.

இத்தாக்குதல்களில் 140 பேர் பலியாகினர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இரட்டை கார் குண்டு தாக்குதல்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் நிகழ்த்தியுள்ளனர். இத்தகவலை ஆன்லைனில் அறிக்கையாக வெளியிட்டுள்ளனர். குண்டுகள் நிரம்பிய காரை ஓட்டி வந்த தற்கொலை படை ஐ.எஸ். தீவிரவாதிகள் ஹோம்ஸ் நகரில் பொதுமக்கள் வாழும் பகுதியில் வெடிக்க செய்துள்ளனர்.

images (5)
சிரிய ராணுவத்திற்கு ஆதரவாக ரஷிய விமானப்படை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சிரிய ராணுவத்துடன் ரஷிய விமானபடை இணைந்து ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது வெடிகுண்டு வீச்சு நடத்தினர். இந்த தாக்குதலில் 50 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஐ.எஸ் தீவிரவாதிகள் பிடியிலிருந்த 15 கிராமங்கள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.