ஆரணியில் உள்ள அரசு பள்ளி உள்பட 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக கடந்த வாரம் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்துக்கு மர்ம நபர் ஒருவர் போன் மூலம் மிரட்டல் விடுத்தார்.
அதை தொடர்ந்து போலீசார் 3 பள்ளிகளிலும் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டுகள் ஏதும் சிக்கவில்லை. மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்த விசாரணை தொடங்கினர்.
மர்ம நபர் பேசிய செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது ஆரணி அடுத்த சந்தவாசல் அருகே உள்ள ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்த முருகன் மனைவி பவானி என்பவரது பெயரில் சிம் கார்டு வாங்கப்பட்டது தெரியவந்தது.
முருகனையும், பவானியையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்களது செல்போன் திருடு போனது தெரியவந்தது. இதனால் தம்பதியை போலீசார் விடுவித்தனர். செல்போன் எண்ணை தொடர்ந்து கண்காணித்தனர். அப்போது ஆரணி பாரதியார் தெரு என்.எஸ்.நகரை சேர்ந்த எலக்ட்ரீசியன் சண்முகம் (வயது38) செல்போனை வைத்திருப்பது கண்டறியப்பட்டது.
சண்முகத்தை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் பள்ளிகளுக்கு அவர்தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார் என்பது தெரியவந்தது. போலீசாரிடம் சண்முகம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:–
எனக்கு திருமணமாகி கலைச்செல்வி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக மகன், மகளுடன் மனைவி பிரிந்து சென்று விட்டார். இந்த வேதனையில் தினமும் மது அருந்துவேன். கடந்த வாரம் உழவர் சந்தைக்கு வந்த முருகனிடம் இருந்து அவரது செல்போனை திருடினேன். அன்றிரவு மதுபோதையில் இருந்த நான் அந்த போனில் இருந்து போலீஸ் நிலையத்துக்கு போன் செய்து 3 பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தேன். போலீஸ் விசாரணையில் சிக்கிக் கொண்டேன்.