வாடகைதாரர்களிடம் அதிக முன்பணம் வசூலிப்பதைத் தடுக்க வாடகை மாதிரி சட்டம் ஓரிரு ஆண்டுகளில் வர உள்ளது என தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். அலுவல், கல்வி, பணியிட மாற்றம், வசதி வாய்ப்புகளுக்கு ஏற்ப மக்கள் குறிப்பிட்ட இடங்களுக்கு குடியேறுகின்றனர். இதனைப் பயன்படுத்தி, வீட்டு உரிமையாளரும் வசதிகளுக்கு தகுந்தாற்போல் வாடகையை நிர்ணயித்துக் கொள்கின்றனர். அதோடு, இடைத்தரகர் (புரோக்கர்), சிறு வீடுகள் விற்பனை செய்வோர் உள்ளிட்டோரால் வீடுகளின் வாடகை பன் மடங்கு உயர்ந்துள்ளன.
இதனால், பெருநகரங்கள் உள்பட அனைத்து இடங்களிலும் வாடகைக்கு வீடு தேடுவது என்பது பெரும் பிரச்னையாக உள்ளது. இதனை கட்டுப்படுத்தவே மத்திய அரசு கடந்த ஆண்டு வாடகை மாதிரிச் சட்டத்தை ஏற்படுத்தியது. அதன்மூலம், அனைத்து மாநிலங்களிலும் சட்ட மசோதாவைக் கொண்டுவர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் இந்த சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளன.
அதிக முன்பணம் வசூலிக்க முடியாது: வாடகை மாதிரிச் சட்டத்தை கொண்டு வரும் நிலையில், இனி வீட்டு உரிமையாளர்கள் 10, 12 மாத வாடகையை முன்பணமாகப் பெறுவது தடுக்கப்படும். அதேபோல, குறைந்தது 3 மாத முன்பணம் வசூலிப்பது, வாடகை உயர்த்துவதை முன்கூட்டியே தெரிவிப்பது, இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுப்பது, பிரச்னைகளை விசாரிக்க தனி ஆணையம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் தெரிவித்தது:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்தச் சட்டம் குறித்து தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகள் ஆராய்ந்து வருகின்றன. இந்தச் சட்டத்தை முழுமையாக கொண்டு வரும் பட்சத்தில் வீட்டு உரிமையாளர்கள், வாடகைதாரர்கள் ஆகியோரின் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும் என்றனர்.