விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஸ்டாலின். மென்பொருள் நிறுவனத்தில் பார்த்துக் கொண்டிருந்த வேலையை உதறிவிட்டு கடலை மிட்டாய் தயாரிக்க இறங்கிவிட்டார் என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இவரது பயணம் இன்று பாரம்பரிய சுவை விரும்பிகள் பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இவரது தொழில் அனுபவம் இந்த வார வணிக வீதியில் உன்னால் முடியும் பகுதியில் இடம்பெறுகிறது.
பொறியியல் படித்துவிட்டு எல்லா இளைஞர்களையும் போல ஒரு பொறுப்பான வேலை, சம்பளம் என்று எனது பயணமும் இருக்கும் என்றுதான் நம்பினேன். ஆனால் சமூக அக்கறை காரணமாக எழுந்த ஆர்வம்தான் இந்த பயணத்தை தொடங்க வைத்தது. நான் சிறு வயதிலிருந்தே கடலை மிட்டாய் சுவை விரும்பி. சிறு வயதில் சாப்பிட்ட கடலை மிட்டாய்களின் சுவை போல இப்போது கிடைப்பதில்லை என்கிற ஆதங்கம் அவ்வப்போது தோன்றும். ஆனால் அவையெல்லாம் ஒரு எதிர்பார்ப்போடு முடிந்துவிடும். இதில் தொழில்வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள முடியும் என்றெல்லாம் யோசித்ததில்லை.
படித்து முடித்துவிட்டு கோயம்புத்தூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தேன். விடுமுறை நாட்கள் மற்றும் கிடைக்கும் நேரங்களில் தனிப்பட்ட ஆர்வமாக ``குக்கூ குழந்தைகள் வழி’’ என்கிற லாப நோக்கமற்ற அமைப்பின் செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வந்தேன். இந்த அமைப்பின் சார்பாக குழந்தைகளைச் சந்திக்க பள்ளிகளுக்குச் செல்லும்போது நான் வாங்கிச் செல்லும் திண்பண்டம் கடலைமிட்டாய்தான். அப்படி செல்லும் நாட்களில்தான் இதை தயாரிப்பதற்கான எண்ணம் உதித்தது.
ஆனால் சந்தையில் தற்போது ஏகப்பட்ட தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். பெரிய நிறுவனங்கள் முதல் உள்ளூர் அளவில் குடிசைத் தொழிலாக பலரும் செய்து வருகின்றனர், இந்த நிலையில் இந்த தொழிலில் இறங்குவதன் மூலம் லாபகரமாக கொண்டுசெல்ல முடியுமா என்கிற கேள்வியும் எழுந்தது. அதே சமயத்தில் எல்லா தயாரிப்பாளர்களும் வெல்லப்பாகு மூலம்தான் தயாரிக்கின்றனர். நாம் வித்தியாசமாக கருப்பட்டி (பனைவெல்லம்) மூலம் செய்தாலென்ன என்கிற யோசனை வந்தது. இந்த முயற்சியை நண்பர்களிடத்தில் பகிர்ந்து கொண்டபோது உற்சாகம் கொடுத்தனர். ஆனால் வீட்டில் சொன்னபோது எனது ஆர்வத்தை மதித்தாலும், இந்த தொழிலுக்காக வேலையை விடப்போகிறேன் என்றதும் பயந்துவிட்டனர்.
இதைத் தொழிலாக எடுத்துச் செய்ய முடிவெடுத்ததும் பலரிடமும் இது குறித்து தகவல்களைச் சேகரித்தேன். பல ஊர்களுக்கும் சென்று கடலை மிட்டாய் செய்பவர்களைச் சந்தித்தேன். பெரும்பாலனவர்கள் குடும்பத் தொழிலாகத்தான் செய்து வருகின்றனர். முறைப்படுத்தப்படாத வேலை நேரம், நிரந்தர ஆட்கள் கிடைக்காது, நிலக்கடலை விலை உயர்வு, தரமான வெல்லம் கிடைக்காது என இதில் உள்ள பல பாதகமான விஷயங்களும் எனக்கு புரியத் தொடங்கியது. ஆனால் எல்லோருமே வெல்லத்தைப் பயன்படுத்திதான் செய்தனர். கருப்பட்டியில் செய்த அனுபவமோ தகவலோ யாரிடமிருந்தும் கிடைக்கவில்லை.
தஞ்சாவூரில் இந்த தொழிலை செய்துவரும் கூடலிங்கம் இந்த முயற்சியை பாராட்டி பல ஆலோசனைகளைக் கொடுத்தார். அதற்கு பிறகு நானும் எங்கள் குடும்பத்தினரிடத்தில் இந்தத் தொழிலுக்கு தேவையான அவர்களது உதவிகளை விளக்கி சம்மதிக்க வைத்தேன். வீட்டிலேயே ஒரு இடத்தை ஒதுக்கி வேலை பார்க்கத் தொடங்கினேன். பல முயற்சிகளுக்கு பிறகு சரியான சுவைக்கு, தரத்துக்கு கொண்டு வந்தேன்.
பாரம்பரியமான தின்பண்டம் என்பதற்காக வழக்கமாக எல்லோரும் கொடுப்பதுபோல அப்படியே கொடுக்கக்கூடாது என காகித பெட்டியில் பேக் செய்தோம். முதல்நாளில் அப்பா, அம்மா, அண்ணன் அண்ணி என குடும்பமே உட்கார்ந்து பேக் செய்து கொடுத்தனர்.
இந்த முயற்சியை தொடங்கி ஆறு மாதம் ஆகிறது. பல தரப்பிலிருந்தும் கிடைத்த ஆதரவால், தயாரிப்பை அதிகப் படுத்தியுள்ளோம். ஆறு நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகியுள்ளது. மார்க்கெட்டிங் வேலைகளுக்காக அவ்வப்போது பல மாவட்டங்களுக்கும் சென்று கொண்டிருக்கிறேன். பேஸ்புக் மூலமும் பல நண்பர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
எனக்கென்று ஒரு தொழிலை உருவாக்கிக் கொண்ட நம்பிக்கையோடு, நான் ஏற்கெனவே பகுதி நேரமாக செயல்பட்டுவந்த குக்கூ அமைப்பின் செயல்பாடுகளில் தற்போது முழு மனதோடு ஈடுபட முடிகிறது. அதைவிடவும் முக்கியமாக இப்போது குழந்தைகளை சந்திக்கச் செல்கையில் கை நிறைய சுவையான கடலை மிட்டாய்களைச் கொண்டு செல்ல முடிகிறது என்பதும் நிறைவளிக்கிறது என்றார்.