புதன், 24 பிப்ரவரி, 2016

இந்தோனேசியாவில் இயங்கிவரும் சிகப்பு விளக்குப் பகுதிகள் அனைத்தையும் மூட அரசு முடிவு

parisஉலகிலேயே இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் இந்தோனேசியா நாட்டில் விபசார தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சுமார் நூறு இடங்களில் இயங்கிவரும் விபசார விடுதிகளை நிரந்தரமாக மூடிவிட அரசு முடிவு செய்துள்ளது.

முன்னதாக, தெற்காசியாவின் மிகப்பெரிய விபசார மையமாக விளங்கிவந்த அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான சுரபயா நகரில் இருந்த அனைத்து விபசார விடுதிகளும் கடந்த 2014-ம் ஆண்டு முழுமையாக மூடப்பட்டன. பின்னர், அடுத்தடுத்து இதுவரை 68 சிகப்பு விளக்குப் பகுதிகள் இழுத்து மூடப்பட்டுள்ளன.

தற்போது, தலைநகர் ஜகர்தாவின் வடக்குப்பகுதியில் உள்ள அனைத்து விபசார விடுதிகளையும் வெளியேற்றுமாறு ஜகர்தா நகர கவர்னர் உத்தரவிட்டுள்ளார். அங்குள்ள விடுதிகளை காலிசெய்து அதில் இருக்கும் பெண்களை வெளியேற்றும் நடவடிக்கை வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ளது.

இந்த நடவடிக்கைகள் நாடு முழுவதும் தொடரும். இன்னும் மூன்றாண்டுகளுக்குள் மேலும் 100 சிகப்பு விளக்குப் பகுதிகள் காலி செய்யப்படும். 2019-ம் ஆண்டுக்குள் விபசாரமற்ற நாடாக இந்தோனேசியாவை அறிவிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என அந்நாட்டின் சமூகநலத்துறை மந்திரி கோஃபிபா இந்தர் பரவான்ஸா தெரிவித்துள்ளார்.