வியாழன், 25 பிப்ரவரி, 2016

பிஜி தீவை சூறையாடிய வின்ஸ்ட்டன் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 36 ஆக உயர்வு

சிபிக் பெருங்கடலின் தென்பகுதியில் சுமார் 300 தீவுகளைக் கொண்ட பிஜி நாட்டை மணிக்கு 230 முதல் 325 கிலோமீட்டர் வேகத்தில் சுழற்றியடித்த வின்ஸ்ட்டன் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. 

உரிய நேரத்தில் பிஜி அரசு செய்த முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளால் பலி எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரி ஜூலி பிஷப் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புயலின் சீற்றத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. நூற்றுக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகிப் போய் கிடக்கின்றன. பல லட்சம் ஏக்கரில் விளைவிக்கப்பட்டிருந்த உணவுப் பயிர்கள் நாசமடைந்தன. 
external
சுமார் ஒன்பது லட்சம் மக்கள் வாழும் இந்த தீவுக் கூட்டங்களின் பல பகுதிகளில் புயல் பாதிப்பால் மின்சாரம், குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

சேத நிலவரத்தை நேரில் சென்று பார்வையிடுமாறு மந்திரிகளையும், அதிகாரிகளையும் அறிவுறுத்தியுள்ள பிரதமர் பிராங்க் பைனிமராமா, நாடு முழுவதும் ஒருமாத காலத்துக்கு அவசர நிலை சட்டத்தை பிரகடனப்படுத்தி உத்தரவிட்டுள்ளார். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் படையினரும், ராணுவத்தினரும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தேங்கி நிற்கும் அசுத்த நீரில் இருந்து உருவாகும் நோய்கிருமிகளால் மக்களுக்கு தொற்றுநோய்கள் பரவாதபடி, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.