வியாழன், 25 பிப்ரவரி, 2016

மாயாவதி-ஸ்மிருதி இரானி இடையே மாநிலங்களவையில் கடும் வாக்குவாதம்

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று, மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை மற்றும் ஜே.என்.யு விவகாரங்களை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளிலும் கடும் கூச்சல் குழப்பம் நிலவியது. 

மாநிலங்களவையில் இந்த விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, “ரோகித் வெமுலா தற்கொலை விவகாரம் தொடர்பாக விசாரணை செய்ய அமைக்கப்பட்டுள்ள குழுவில் தலித் யாரும் இல்லாதது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார். 

ரோகித் வெமுலா தற்கொலைக்கு காரணமான மாணவர்கள் மீதும் மோடி அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், இந்த விவகாரத்தில் ஸ்மிருதி இரானி, பண்டாரு தத்தாத்ரேயா ஆகிய இரு மத்திய மந்திரிகள் நிச்சயம் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினார். 

மேலும், பா.ஜ.க., அரசு தலித் விரோத போக்கை கடைபிடிக்கிறது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை மாயாவதி அடுக்கிக் கொண்டே சென்றார்.

அதற்கு பதிலளித்து பேசிய, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரி ஸ்மிருதி இரானி, நீதித்துறை விசாரணையில் சாதியை கொண்டு வருவது எப்படி சரியாகும்? என்று கூறினார். மேலும், “நான் தரும் விளக்கம் உங்களை திருப்தி செய்யவில்லை என்றால் என்னுடைய தலையை வெட்டி உங்கள் காலடியில் வைக்கிறேன்” என்று தெரிவித்தார்.

விவாதம் நடத்தும் முறை சரிதானா என்று கேள்வி எழுப்பிய ஸ்மிருதி இரானி, ஒரு குழந்தையை அரசியல் கருவியாக பயன்படுத்தியது யார்? என்றும் வினவினார்.

மாநிலங்களவை தொடங்கிய ஒரு மணிநேரத்திலேயே ஸ்மிருதி இரானி மற்றும் மாயாவதி இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. 

மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய பகுஜன் சமாஜ் உறுப்பினர்கள், அவைக்கு நடுவில் வந்து அமளியில் ஈடுபட்டனர். பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி-க்களின் கடும் அமளியால் மாநிலங்களவை பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. 

தொடர்ந்து பேசிய மாயாவதி, ரோகித் தற்கொலை விவகாரத்தையும், ஜே.என்.யு., மாணவர் பிரச்சனையும் தனித்தனியே விவாதிக்காவிட்டால் அவை நடவடிக்கையை எதிர்ப்போம் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.