திங்கள், 22 பிப்ரவரி, 2016

முதலீட்டில் தவிர்க்க வேண்டிய தவறுகள்:


முதலீடு செய்வதன் அருமையை உணர்ந்திருந்தால் மட்டும் போதாது. முதலீடு செய்யும் விதம் சரியாகவும் அமைந்திருக்க வேண்டும். அதாவது, ஒருவர் நாடும் முதலீட்டு வழிகள், அவரது நிதி இலக்கிற்கு ஏற்ப இருக்க வேண்டும்.
இதை எப்படி தீர்மானிப்பது எனும் கேள்வி இருந்தால், பொதுவாக முதலீட்டாளர்கள் செய்வதாக நிதி வல்லுனர்கள் கருதும் இந்த தவறுகளை தவிர்ப்பதில் கவனம் செலுத்துங்கள்:
முதலீட்டு உத்தி என்ன?
முதலீட்டில் ஈடுபாடு உள்ளவர்கள் நன்றாக ஆய்வு செய்த பிறகே முதலீட்டிற்கான திட்டங்களை தேர்வு செய்கின்றனர். ஆனால், முதலீட்டு திட்டம் சிறந்ததாக இருப்பதால் மட்டுமே எதிலும் பணத்தை போடுவது சரியாக இருக்காது.
குறிப்பிட்ட அந்த முதலீட்டு திட்டம் அல்லது சேவை முதலீட்டாளரின் நிதி திட்டமிடலுக்கு பொருத்தமாக இருக்கிறதா எனும் அம்சத்தையும் கவனிக்க வேண்டும். இல்லை என்றால், சிறந்த முதலீட்டு சாதனங்களாக குவிந்திருக்குமே தவிர அதற்கு உண்டான முழு பலன் இருக்காது.
ரிஸ்க் திறன்
சரியான முதலீட்டு உத்தி இல்லாமல் திட்டங்கள் அடிப்படையில் முதலீடு செய்யும் போது, ஒன்று தேவைக்கு அதிகமான பரவலாக்கல் நிகழும் அல்லது குறிப்பிட்ட சிலவற்றில் மட்டும் அதிக முதலீடு இருக்கும். உதாரணத்திற்கு, சிறந்த காப்பீடு திட்டங்கள் மீது மட்டும் கவனம் செலுத்தினால், அதிகபடியான காப்பீடு திட்டங்களை வாங்கி வைக்கும் நிலை வரலாம். அல்லது தங்கம் போன்ற குறிப்பிட்ட ஒன்றில் அதிகமாக முதலீடு செய்யப்பட்டிருக்கலாம். இரண்டுமே பாதிப்பை உண்டாக்கலாம்.
மற்றவர்கள் வழியில்
நண்பர்கள் அல்லது உறவினரை பார்த்து அவர் செய்திருக்கும் முதலீட்டு திட்டத்தை பின்பற்றுவதும் சரியாக இருக்காது. முதலீட்டிற்கான தேவை தனிநபர்களுக்கு ஏற்ப மாறக்கூடியது.
எதிர்பாராதது
எதிர்பாராததை எதிர்பார்க்க வேண்டும். அதாவது, வேலையிழப்பு, மருத்துவ செலவு போன்ற அவசர கால நெருக்கடிகளை சமாளிக்க எப்போதுமே அவசர கால நிதி உருவாக்கி வைத்திருக்க வேண்டும். அலசி ஆராய்ந்து முதலீடு செய்துவிட்டு அதன் பிறகு முதலீடு எப்படி செயல்படுகிறது என்பதை கண்டுகொள்ளாமல் இருந்துவிடக் கூடாது. அவ்வப்போது முதலீட்டின் பலன்களை கவனிக்க வேண்டும்.