புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நார்த்தாமலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை மர்ம நபர்கள் ஜன்னலை உடைத்து கொள்ளையிட முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் திங்கள்கிழமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை அருகே நார்த்தாமலையில் அரசுடமை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை கடந்த பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. வாடகைக்கட்டடத்தில் இயங்கி வந்த இவ்வங்கி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் புதிய புதிய கட்டடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. விவசாயம் சார்ந்த கிராமங்களை அதிகம் கொண்டுள்ளதால் இந்த வங்கியில் சுற்று வட்டாரத்திலுள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் விவசாயக்கடன், நகைகடனுதவி பெற்று தங்களது தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர்.
மேலும் இப்பகுதியில் நூற்றுக்கணக்கான தனியார் கல் குவாரிகள் செயல்பட்டு வருவதால் கோடிக்கணக்கில் வரவு செலவு நடைபெற்று வருகிறது. சனி, ஞாயிறு ஆகிய 2 நாள்கள் விடுமுறைக்குப்பின் வழக்கம் போல திங்கள்கிழமை காலையில் வங்கியை திறப்பதற்காகச்சென்ற வங்கி மேலாளர் குணசேகரன் வங்கியின் நுழைவு வாயிலருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் (சிசிடிவி) காமிராவின் வயல் அறுந்திருந்ததைப் பார்த்துள்ளார். இதையடுத்து சந்தேகமடைந்த அவர் வஙகியின் வெளியே 3 பக்கமும் சுற்றிப்பார்த்தபோது ஒரு பகுதியில்வங்கியின் ஜன்னல் கண்ணாடி உடைந்திருந்ததும், உள்ளேயிருந்த ஜன்னல் கம்பி ஆக்ஸா பிளேடால் பாதி அறுக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து கீரனூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததபின், காவல் ஆய்வாளர் ஞானவேலன் தலைமையில் போலீஸார் அங்கு சென்று வங்கியின் கதவைத் திறந்து உள்ளே சென்று ஆய்வு செய்தனர். அதில், ஜன்னல் கம்பியை அறுக்கும் முயற்சி பலனளிக்காததால் திருடவந்த மர்ம நபர்கள் திரும்பிச் சென்றுள்ளது தெரியவந்தது. இதையடுத்து வங்கியில் இருந்த சிசிடிவி காமிராவின் பதிவை ஆய்வு செய்த போது வங்கி வாயிலில் ஒரு மர்ம நபர் தலையில் முக்காடு போட்டு குனிந்தபடி சென்ற காட்சி 5 நொடிகள் இருந்ததைப் பார்க்க முடிந்தது.
இது குறித்த புகாரின் பேரில் கீரனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திட்டமிட்டபடி இவ்வங்கிக் கொள்ளை நடந்திருந்தால் விவசாயிகள் அடகு வைத்துள்ள பல கோடி மதிப்புள்ள தங்க நகைகள், ரொக்கம் பறிபோயிருக்கும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர். ஏற்கனவே கடந்த ஆண்டில் இதே சாலையில் குளத்தூரில் இயங்கி வரும் தனியார் (சிட்டியூனியன்) வங்கியில் நடந்த கொள்ளை சம்பவத்தில் 80 கிலோ தங்க நகைகள் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது. ஓராண்டுக்குப்பின் மீண்டும் நடைபெற்றுள்ள கொள்ளை முயற்சி மாவட்ட மக்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.