ஹரியானாவில் ஜாட் இன மக்களுக்கு இட ஒதுக்கீடு கோரி நடைபெறும் போராட்டங்களில் வன்முறையை கட்டுப்படுத்த மூன்று மாவட்டங்களில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவங்களில் 8 பேர் உயிரிழந்தனர்.
இட ஒதுக்கீடு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அரசுக்கு சொந்தமான பல பேருந்துகளுக்கு தீ வைத்து எரித்தனர். ஏழு ரயில் நிலையங்கள், ஒரு காவல்நிலையம், மற்றும் அரசுக்கு சொந்தமான சில கட்டடங்களும் தீக்கிரையக்கப்பட்டன.
ரோதக் மாவட்டத்தில் பல சாலைகள் மறிக்கப்பட்டிருப்பதால் ராணுவம் ஹெலிகாப்டர்களை பயன்படுத்த வேண்டிய நிலை உருவானது. அந்த மாவட்டத்தில் உள்ள ஒரு பால் பதனிடும் ஆலையும் தீவைத்து அழிக்கப்பட்டது. பல பகுதிகளுக்கு பரவி வரும் வன்முறையை கட்டுப்படுத்துவதற்காக 8 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹரியானாவில் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டதுடன், அண்டை மாநிலங்களுக்கும் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
தொடரும் போராட்டங்களால் 800-க்கும் அதிகமான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. போராட்டக்காரர்களின் கோரிக்கைளை அரசு ஏற்றுக்கொண்டிருப்பதால் அவர்கள் போராட்டத்தை கைவிடவேண்டும் என ஹரியானா மாநில முதலமைச்சர் மனோஹர் லால் கட்டார் கேட்டுக்கொண்டுள்ளார்.
எனினும் ஜாட் இன மக்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்கும் அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என அந்த சமுதாய தலைவர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.