வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தனியார் கல்லூரியில் அடையாளம் தெரியாத பொருள் வானத்திலிருந்து விழுந்து பெருத்த சப்தத்தோடு வெடித்தது.
இந்த சம்பவத்தில் கல்லூரி பேருந்து ஓட்டுநர் காமராஜ் உயிரிழந்தார். மற்றொரு ஓட்டுநரும், இரு தோட்டத் தொழிலாளர்களும் காயமடைந்தனர். மேலும், கல்லூரி மாணவர் ஒருவரின் கேட்கும் திறன் பாதிக்கப்பட்டது. காயமடைந்த நால்வரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விழுந்து வெடித்த பொருளால், அங்கு நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளின் கண்ணாடிகளும், அலுவலக ஜன்னல் கண்ணாடிகளும் உடைந்தன. தகவலறிந்த அமைச்சர் கே.சி வீரமணி, காவல்துறை அதிகாரிகள், நாட்றம்பள்ளி வட்டாட்சியர் செல்வராஜ் உள்ளிட்டோர் கல்லூரிக்குச் சென்று நேரில் விசாரணை நடத்தினர். விண்ணில் இருந்த விழுந்த பொருள் எரிகல் என சந்தேகிக்கப்படுகிறது.
இது குறித்து எரிகல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மண்ணில் புதையுண்ட பொருளை எடுத்து ஆய்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.;
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் கடந்த 26-ம் தேதி, இதேபோன்று அடையாளம் தெரியாத பொருள் ஒன்று விண்ணில் இருந்து விழுந்தது. அதுவும் எரிகல் என்று சந்தேகிக்கப்படுகிறது.