வெள்ளி, 1 ஏப்ரல், 2016

Dr.ஆஃபியா :விடுதலைக்காய்ப் பிரார்த்தித்து அநீதிக்கெதிராகக் குரல்கொடுப்போம்.



பாகிஸ்தானைச் சேர்ந்த சகோதரி Dr.ஆஃபியா 2003 மார்ச் 30ல் பாகிஸ்தான் உளவுத்துரையினால் கைதுசெய்யப்பட்டு அமெரிக்க FBI இடம் விசாரனைக்காக ஒப்படைக்கப்பட்டார்.
“உஸாமாபின் லேடனின் அமைப்புக்கு நிதியுதவிகள் செய்துள்ளார்” என்ற போலிக் குற்றச்சாட்டுகளை அவர்மீது சுமத்தியே விசாரனையென்ற பெயரில் அவரைக் கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்ட அவர் ஆப்கானிஸ்தான் பக்ரம் (Bagram) சிறையில் அடைக்கப்பட்டு வாய்விட்டுச் சொல்லமுடியாதளவு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சிறைக்காவலர்களால் மோசமான முறையில் பாலியல் சித்திரவதைகளுக்கும் ஆளாகியுள்ளார்.
இக்கொடுமையை 2008 ஜுலை 06ஆம் தேதி பிரபல முன்னால் பிரிட்டிஷ் பத்திரிகையாளர் இவோன் ரெட்லி அம்பலத்துக்குக் கொண்டுவந்துள்ளார். அவர் சகோதரி ஆஃபியாவின் விடுதலைக்கான நடவடிக்கைகளில் களமிறங்கி செயற்பட்டுவந்தார்.
சுயநினைவிழந்து, பற்கள் மற்றும் மூக்கு உடைந்து, உதடுகள் கிழிந்து படுபயங்கரமான தோற்றத்துக்கு அப்பெண் மாற்றப்பட்டுள்ளதாக ரெட்லி குறிப்பிடுகின்றார்.
ஒரு கூட்டத்தினிடையே ஆஃபியா தனித்து விளங்கக்கூடிய அளவுக்கு தோற்றமோ அல்லது தனித்துவமோ வாய்ந்தவர் அல்ல. ஆனால் ஆழ்ந்த இஸ்லாமியப்பற்றும் தஃவா உணர்வும் கொண்டவர்.
தனது ஓய்வு நேரங்களில் புதிதாக இஸ்லாத்தைத் தழுவியவர்களுக்கு இஸ்லத்தைப் பற்றிய விளக்க வகுப்பு எடுப்பார். சிறைக்கைதிகளுக்கும் பாடசாலை, பல்கலைக்கழகங்களுக்கும் குரான் பிரதிகளை தானே எடுத்துச் சென்று விநியோகிப்பவராகவும் ஒரு சுதந்திரமான பெண்ணாகவும் அவரைக் கண்டதாக அவரது தோழிகள் வர்ணிக்கிறார்கள்.
ஒரு முறை ஆஃபியா தன் பிரதேச பள்ளிவாசலில் பொஸ்னிய முஸ்லிம்களுக்காக உதவி செய்யுமாறு உருக்கமான வேண்டுகோள் விடுத்தாராம். அசையாதிருந்த பார்வையாளர்களை நோக்கி, “உங்களில் எத்தனை பேருக்கு ஒரு ஜோடிக்கு மேல் பாதணி இருக்கிறது” என்று கேட்க எல்லா கைகளும் உயர்ந்தனவாம். “உங்கள் பாதணிகளை தர்மம் செய்யுங்கள். பொஸ்னிய முஸ்லிம்கள் கடுமையான குளிர்காலத்தை எதிர்நோக்கியுள்ளனர்” என்று ஆஃபியா சொன்ன வார்த்தைகளின் உணர்வைத் தாங்க முடியாமல் பள்ளிவாசல் இமாமும்கூட பாதணியைக் கழற்றிக் கொடுத்தாராம்.
டொக்டர் ஆஃபியா தனது குழுவின் இணையதளத்தில் தஃவா செய்வது எப்படி என்று எழுதுகிறார்.“எங்களது மிகச்சிறிய ஆனால் தூய்மையான இந்த தஃவா முயற்சி இந்த நாட்டின் மிகப் பெரிய தஃவா இயக்கமாக, சக்தியாக பரிணமிக்கும் ஒரு நாளைக் கற்பனை பண்ணிப்பாருங்கள்.
இந்த இயக்கத்தின் மூலமாக இஸ்லாத்தினை நோக்கி வரும் ஒவ்வொருவருக்காகவும் அல்லாஹ் எங்களுககு அளிக்கப்போகும் வெகுமதிகளை எண்ணிப்பாருங்கள். சிந்தனையை விசாலப்படுத்துங்கள், திட்டமிடுங்கள் என கூறினார்.
ஆகஸ்ட் 4ஆம் தேதி ஆஃபியா அமெரிக்காவின் நியூயார்க் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். அவரது தோற்றம் முழுமையாக மாறியிருந்தது. சக்கர நாற்காலியொன்றில் ஆஃபியா கொண்டுவரப்பட்ட காட்சி அங்கிருந்த சகலரையும் கண்ணீர் மல்கச்செய்தது. சிறைச்சாலை சீருடை, குவாண்டனாமோவில் அணிவிப்பது போன்ற கையில்லாத மேலங்கியுடன் வந்தவர், அதற்கு மேலால் பக்கத்திலிருந்த ஒருவரிடம் ஒரு துணியை வாங்கி தலையையும் எலும்பில் சதை போர்த்தியது போன்ற கரங்களையையும் மறைத்துக் கொண்ட ஆஃபியாவின் இஸ்லாமிய உணர்வு கண்டு பார்வையாளர்கள் அதிர்ந்துபோயினர்.
டாக்டர் ஆஃபியா சிறையிலிருந்தபோது, அவரது ஒரு சிறுநீரகம் அகற்றப்பட்டுள்ளதோடு அவரது மனநிலையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என அவரது வழக்குரைஞர்கள் சொல்கிறார்கள். அவரது உடம்பிலிருந்த துப்பாக்கிச்சூட்டுக் காயத்தில் இரத்தம் உறைந்து சரியாகக் கவனிக்கப்படாமல் இருந்ததோடு பற்களும் உடைந்திருந்தன. மூக்கு உடைக்கப்பட்டு உதடு கிழிந்துள்ள ஆஃபியாவின் உடல் நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அல்லாஹுத் தஆலா சகோதரி ஆஃபியாவைப் பொருந்தி கொள்வானாக.
நிவ்யோக் நீதிமன்றத்தில்; அவருக்கு 86 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. ஏற்கனவே அவர் பட்டிருக்கும் வேதனைகளோ சொல்லிற்கடங்காதவை
உடன் பிறவா அச்சகோதரியை எமது பிரார்த்தனைகளில் சேர்த்துக்கொள்வோம். அவரது விடுதலைக்காய்ப் பிரார்த்தித்து அநீதிக்கெதிராகக் குரல்கொடுப்போம்.