புதன், 13 ஏப்ரல், 2016

பெண்கள் லெக்கின்ஸ், ஜீன்ஸ் அணிய தடை: உ.பி. கிராம பஞ்சாயத்து முடிவு


பாக்பத்:

இப்போது இளம் பெண்கள் ஜீன்ஸ், லெக்கின்ஸ் போன்ற உடைகளை ஆர்வமாக அணிகிறார்கள். ஆனால் இந்த உடைகள் ஆபாசமாக இருப்பதாக சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் கூட இந்த உடைகளை கோவிலுக்கு வருபவர்கள் அணிந்து வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டது. பின்னர் கோர்ட்டு உத்தரவால் விலக்கி கொள்ளப்பட்டது.

இந்தநிலையில் உத்தரபிரதேச கிராமம் ஒன்றில் பெண்கள் ஜீன்ஸ், லெக்கின்ஸ் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. பகாபத் அருகே உள்ள பவாளி என்ற கிராமத்தில் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

அந்த கிராமத்தில் கிராம பஞ்சாயத்து கூட்டம் நடைபெற்றது. அங்கு பஞ்சாயத்து தலைவராக பெண் ஒருவர் இருக்கிறார். அவருடைய கணவர் ஓம்வீர் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது.

அதில் கிராமத்து பெண்கள் ஜீன்ஸ், லெக்கின்ஸ் அணியக் கூடாது. அதை மீறி அணிந்தால் அந்த பெண்ணும், குடும்பத்தினரும் ஊரை விட்டு விலக்கி வைக்கப்படுவார்கள்.

அந்த குடும்பத்தில் இறப்பு நடந்தால் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கிராம மக்கள் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு உணவு பொருட்களும் வழங்கப்படமாட்டாது என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பஞ்சாயத்தார் எடுத்த இந்த முடிவு உத்தரபிரதேச மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.