சனி, 9 ஏப்ரல், 2016

தமிழகத்திலேயே முதல்முறையாக சேலம் மூக்கனேரி ஏரிக்கு ஒரு பொற்காலம் பிறந்துள்ளது!


சேலம் மாநகரில் உள்ள முக்கிய நீர்நிலைகளில் ஒன்று மூக்கனேரி.. முறையான பராமரிப்பின்றி, குப்பை மேடாகவும், சாக்கடையாகவும், திறந்தவெளி கழிப்பிடமாகவும் இருந்த இந்த மூக்கனேரியை தத்தெடுத்தது, பியூஷ் மனுஷ் என்ற தன்னார்வலரின் தலைமையிலான ‘சேலம் மக்கள் குழு’.
ஏரியை மீட்பது குறித்து சேலம் நகரம் முழுக்க பிரச்சாரம் செய்யப்பட்டது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொது மக்களிடம் இந்தப் பிரச்சினை முன் வைக்கப்பட்டது. பணிகள் தொடங்கின.
ஒவ்வொரு சனி, ஞாயிறுகளிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆண்கள், பெண்கள் என மக்கள் 500 பேர் வரை கூடினார்கள். சில்லறை காசுகள் தொடங்கி ரொக்கம் வரை கையில் இருந்த காசை போட்டார்கள். தினக் கூலிக்கு செல்பவர்கள் பலர் வேலையை விட்டுவிட்டு வந்து கரைகளை சீரமைத்தார்கள்.
ஏரியில் இருந்த பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகள் நூற்றுக்கணக்கான லாரிகளில் அப்புறத்தப்படுத்தப்பட்டன. கருவேல முட்செடிகள் வேராடு பிடுங்கப்பட்டன. தூர்ந்திருந்தப் பகுதிகள் எல்லாம் தூர்வாரப்பட்டன.
தூர்வாரியதில் மலை போல குவிந்தது வண்டல் மண். அதனை வீணாக்காமல் ஏரியின் நடுவே கொட்டி 48 திட்டுக்களை ஏற்படுத்தி, ஒவ்வொரு திட்டிலும் 300 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்தத் தீவு சூழலியல் ரீதியாக தண்ணீரை சேமிக்கும் தன்மைக் கொண்டதாக அமைந்தது. 30 வாரங்களில் இந்தப் பணிகள் நடந்து முடிந்தன. ரூ.53 லட்சம் செலவானது.
சில மாதங்கள் சென்ற பிறகு திட்டுக்களில் மரங்கள் வளர்ந்து பலன்கள் தந்தது. வளர்ந்த மரங்களுக்கு பறவைகள் வந்து தங்கியது. இப்போது மூக்கனேரி சோலைவனமாகவும், பறவைகள் சரணாலயமாகவும் மாறி நிற்கிறது. மக்கள் செல்லவே அஞ்சிய அந்தப் பகுதிக்கு இன்று குடும்பத்துடன் சென்று ரசிக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக ஏரியில் தேக்கப்பட்ட நீரால் இந்த பகுதியின் நீர் மட்டம் உயர்ந்து, இப்பகுதியில் தண்ணீர் பிரச்னை இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது..